நாடாளுமன்ற அமர்வு இன்றுமுதல் நேரடி ஒளிபரப்பு
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் பகுதியளவில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதலாவது கட்டமாக இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையான முதல் இரண்டு மணித்தியாலங்கள், அரச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வானது ஏற்கனவே சில செம்மையாக்கலுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தபோதும், பின்னர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் நாடாளுமன்ற அமர்வை நேரடி ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்தமைக்கமைய, அதன் முதல் கட்டமாக பகுதியளவில் அரச தொலைக்காட்சிகளில் நேரம் ஒதுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் இணங்காணப்படும் தொழிநுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை சீர்செய்து, பின்னர் முழுமையாக ஒளிபரப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.