Breaking News

குடும்ப ஆட்சியை மக்கள் தோற்கடித்த போதும் மாற்றங்கள் ஏற்படவில்லை - ஜேவிபி குற்றச்சாட்டு

விடுதலையினை நோக்கி பயணிப்பதற்கு பௌதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்காது, ஜனநாயக போராட்டங்களின் மூலம் விடுதலையினை நோக்கி பயணிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார் 


சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாணம் போரினாலும், முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முழுமையாக கிடைக்கவில்லை. சேகுவேரா இன ஒடுக்குமுறைக்காக போராடியவர். 

சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினையினை தவிர்த்து, எதிரிகளை அடையாளம் கண்டு விடுதலை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அடிப்படை உரிமைகளின்றி வாழ்கின்றார்கள்.

முதலாளித்துவத்தினை தோற்கடிப்பதற்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பது சேகுவேராவின் கருத்தாக இருக்கின்றது. பௌதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்கவில்லை. மாற்றங்கள் எமக்கு கட்டாயம் தேவை. அந்த மாற்றங்களுக்கு வழிகாட்டக் கூடியவராக சே இருக்கின்றார். 

எமது நாட்டில் உள்ள மக்கள் குடும்ப ஆட்சியை தோற்கடிக்க போராடினார்கள். அதில் வெற்றி பெற்றார்கள். ஆனால், எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலை தற்போது இருக்கின்றது. விவசாயம் பொருளாதார ரீதியில் நெருக்கடியாக இருக்கின்றது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விவசாயிகளின் பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.