இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தக் கோரி மன்னாரில் தபால் அட்டை போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக வடபகுதி தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாகவே பிரதமர், ஜனாதிபதி ஆகியோரிற்கும் தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் போராட்டம் யாழ்ப்பாணம், முல்லைதீவு ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையிலேயே இன்றைய தினம் குறித்த போராட்டம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம், இந்தியமீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையை நிறுத்;தும் வகையில் வடமாகாண மீனவர்கள் தபால் அட்டை போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், வடமாகாண முதலமைச்சர் ஆகியொருக்கு வடமாகாண தழுவிய ரீதியில் 20 ஆயிரம் தபாலட்டைகள் அனுப்புவதற்கு நாங்கள் தீர்மானித்திருந்தோம்.
அதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் தபால் அட்டைகள் எமது மீனவர்கள் ஊடாக கையொப்பமிட்டு அனுப்பும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து சங்கங்களின் ஊடாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. குறித்த தபால் அட்டைகள் அனுப்பி வைப்பதன் ஊடாக இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.
இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் குறித்த தபாலட்டை போராட்டம் வேறு வடிவில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அரசிற்கு முன்வைக்க விரும்புகின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.