Breaking News

ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக,  முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணா அறிந்திருந்தார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தப் படுகொலை தொடர்பான விபரங்களைப் புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை எனினும், விரைவில் முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நொவம்பர் 10ஆம் நாள் கொழும்பில் வைத்து, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.