சாவகச்சேரியில் இரும்பு திருட்டு – 8 இராணுவத்தினர் கைது
திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதடி, நாவற்குழி பகுதியில் விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகள், மற்றும் இரும்பு தூண்களைத் திருடிய போது, இவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதடி, நாவற்குழி பகுதியில் குறித்த இராணுவத்தினர் இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அவர்கள் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல மாதங்களாக இவ்வாறான இரும்பு திருட்டுக்களும், ஏனைய பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றிருந்த நிலையில், அவ்வாறான சம்பவங்களில் குறித்த இராணுவத்தினரும் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொள்கின்றனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை மீட்பதற்கும், இந்த சம்பவத்தினை மூடி மறைப்பதற்கும் இராணுவத்தினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.