இந்தியா மௌனம் கலைக்கவேண்டும் பிரேரணை வலுவடைவது அவசியம்! விவாதத்தில் அன்புமணி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா உடனடியாக மௌனம் கலைத்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கின்றோம். இதனை 77 மில்லியன் தமிழ் மக்களின் சார்பில் இந்த இடத்தில் கூறுகின்றேன்.
ஐ.நா. இலங்கை தொடர்பில் வெ ளியிட்ட அறிக்கையில் கலப்பு விசாரணை நீதிமன்ற முறை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ள பிரேரணையில் உள்ளக விசாரணை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது.
இலங்கை யுத்தத்தின்போது குற்றமிழைத்துள்ளது. எனவே குற்றமிழைத்தவர்களையே விசாரிக்கும் பணியில் அமர்த்த முடியாது. புதிய அரசாங்கம் வந்த பின்னரும் இலங்கையில் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படவில்லை. பாலியல் வன்முறைகள் இடம்பெறுகின்றன. எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையையே நாங்கள் கோரி நிற்கின்றோம்.
இந்த விடயத்தில் இந்தியா உடனடியாக மௌனம் கலைத்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.