இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்க சீனா தயாராம்
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின் உட்பட்ட குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது சீன - இலங்கைக்கிடையிலான நட்புறவு தொடர்பில் கலந்துரையாடியதுடன், ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்திலும், ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொடிய சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கையில் நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலை தொடர்பில் இலங்கை வருகை தந்துள்ள சீனக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.