ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களுடன் சுரேஷ் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பிரஷெல்ஸ்ல் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் பங்கேற்புடனான கலப்பு விசேட நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பொதுநலவாய, வெ ளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையையே வலியுறுத்துகின்றது.
கடந்த காலத்தில் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுகளின் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு கசப்பான அனுபவங்களே உள்ளன. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் விசாரணைகளை முன்னெடுப்பதாக பல்வேறு வாக்குறுதிகளை அரசாங்கம் சர்வதேசத்திற்கும், ஐ.நாவுக்கும் வழங்கியுள்ளது. இருப்பினும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து எவ்விதமான விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே அவ்விடயங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு எவ்வாறான கட்டமைப்புக்கள் அமைக்கப்படவேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளனர். இவர்களே நேரில் கண்ட சாட்சியங்களாக இருக்கின்றனர். இருப்பினும் தற்போது வரையில் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கியிருக்கும் இவர்களால் எவ்வாறு சுயாதீனமாகச் செயற்பட்டு சாட்சியங்களை வழங்க முடியும். ஆகவே உள்ளகப்பொறிமுறைகள் முன்னெடுப்பதற்கு முன்னதாக வடகிழக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும். சாட்சியங்கள் பாதுகாப்பு தொடர்பாக விசேட பொறிமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டும். மேலும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறுகின்றமையை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு வலியுறுத்தவேண்டும் எனக் கோரியுள்ளேன்.
அத்துடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதுள்ள நிலைமைகள், வடக்கு கிழக்கு மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்சினைகள் அவர்களின் தேவைப்பாடுகள், முன்னெடுக்கப்படவேண்டிய நலத்திட்டங்கள் தொடர்பாகவும் அப்பிரதிநிதிகளிடத்தில் எடுத்துரைத்தேன் என்றார்.
நோர்வே தமிழ்த் தரப்புக்களுடன் சந்திப்பு
அதேநேரம் நேர்வேயில் உள்ள தமிழ்த் தரப்புக்களுடனும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக புதிய ஆட்சியாளர்கள், விசேடமாக வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் அங்கு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள், மக்களின் வாழ்வாதார நிலைமைகள், தேவைப்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல், சமுக பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.