பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: ஐ.நா
இறுதி மோதல்களின் போதும், மோதல்களின் முன்னரும் பின்னரும் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியுள்ளதன் மூலம், நீதி வழங்குவதிலும், மோசமான அனைத்துலக சூழலில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதிலும் அனைத்துலகத் தலையீட்டின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படடுள்ளது. இது செயற்பாட்டில் இறங்கவேண்டிய நேரம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு ஆலோசனை வழங்கவும், நீதி, பொறுப்புக்கூறல், கடந்தகால வன்முறைகள் மீள நிகழாமல் உறுதிப்படுத்துவதற்கும், சட்ட மற்றும் நிறுவக மாற்றங்களின் ஊடாக நீதித்துறை மற்றும் உண்மையைக் கண்டறியும் செயல்முறையிலும், அதனுடன் இணைந்து பயணிக்கவும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் ரவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையுடன் பரந்தளவில் ஈடுபாடு காட்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.