சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும் என்பதாலும், புண்ணுக்கு புனுகு தடவும் கதையாகப்போய் விடும் என்பதாலும் தான், உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வதேச விசாரணை வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்திய அரசும் பெரும் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமென்றும், இந்தியாவே அதற்காக தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து நாம் தெரிவித்து வந்தோம்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்த போது, இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. அதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையும் நடத்தி அவர்களுடைய மனதை மாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது, இறுதியாக திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் அனைத்தும் சேர்ந்து 1-10-2015 அன்று கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், “காமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர்கள் மற்றும் புலன் விசாரணை நிபுணர்கள் ஆகியோர் பங்குபெறும், நம்பகத்தன்மை உள்ள நீதி விசாரணை அமைப்பு ஒன்றை இலங்கை அரசு உருவாக்கி, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் தீர்மானத்தை மற்றநாடுகளுடன் இணைந்து, கொண்டு வந்து இலங்கை அரசும் ஆதரித்தது.
ஆனால் அங்கே தீர்மானத்தின் அடிப்படை காரணமாக இருந்து விட்டு, தீர்மானம் நிறைவேறிய பிறகு, அந்தத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை ஜனாதிபதி, விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று பேட்டியளித்திருப்பதில் இருந்தே, இலங்கை எவ்வாறெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகவும், அனைத்து நாடுகளின் தீர்மானத்தையே புறக்கணித்திடும் அலட்சியத்தோடும் நடந்துகொள்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியாவும் இலங்கையின் சர்வதேச ஒத்துழைப்புக்கு விரோதமான நிலையினை தற்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இலங்கை அரசின் சார்பில் அதன் ஜனாதிபதி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து, அனைத்து நாடுகளின் முகத்திலும் கரி பூசியிருப்பதை புரிந்து கொண்டு, இப்போதாவது இந்தியா ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம், இலங்கை ஜனாதிபதியின் மாறுபட்ட அறிவிப்பு எப்படி மனித உரிமைகள் ஆணையத்திற்கே முரணானது, சர்வதேச உறவின் நெறிமுறைகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியது என்பதை விளக்கி, அந்த நாடுகளின் ஆதரவைப் பெற்று சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே உருவாக்கி, விசாரணை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுறுவதற்கு ஏதுவாகக் கண்காணித்திட வேண்டும் என்றும், தனித்தீர்மானம் ஒன்றினை முன் மொழிந்து நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது தான் பொருத்தமாக இருக்கும், அதன் மூலம் உலகத் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பினை ஓரளவுக்கேனும் நிறைவு செய்திட முடியும்; ஈழத்தமிழர்கள் அனுபவித்த எண்ணற்ற கொடுமைகளுக்கு முதல் நிலை நீதியாவது கிடைத்திடும், இந்தியா இதுவரை மேற்கொண்டு வரும் நிலைப்பாட்டினைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும், என்பதை மத்திய அரசு உணர்ந்து, உடனடியாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.