அமெரிக்க பிரேரணை – மௌனம் கலைந்தது இந்தியா
இலங்கையில் தமிழ் மக்கள் சமஉரிமையுடன் வாழவேண்டுமென்றும் அங்கு அதிகார பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இந்தியா வலியுறுத்துவதாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி நீதியான விசாரணை நடத்தி இலங்கை நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் இந்திய பிரதிநிதி ஜெனிவாவில் குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படும்போது இந்திய பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
‘அமெரிக்கப் பிரேரணைக்கு இலங்கை இணைய அனுசுரணை வழங்க தீர்மானித்ததை வரவேற்கின்றோம். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு இந்தியா தயாராகி இருக்கிறது.
இலங்கையில் பல்லின, பல்மத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றும் அங்கு அதிகார பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்தியா வலியுறுத்துகின்றது.
அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி நீதியான விசாரணை நடத்தி இலங்கை நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றும் கூறினார்.