அனைத்துலக குற்றவியல் நீதிவிசாரணையே தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி
எமது சக்தியை மீறித் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் நாம் வெறுமனே வார்த்தைகளில் எதிரப்பைக் காட்டிக் கொண்டிருப்பதனால் பயன் ஏதும் வரப்போவதில்லை.
சிறிலங்கா அரசுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை இப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை உன்னிப்பாகக் கண்காணித்து ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வெளிப்படுத்தி அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவை என்பதனை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்காக சட்ட, அரசியல் நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்றினை அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இக் குழுவில் இடம்பெறுவோர் பெயர் விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். இவர்கள் சிறிலங்கா அரசின் விசாரணைப்பொறிமுறையைக் கண்காணித்து சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பணியைச் செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய விரிவான செவ்வியின் விபரம் :
கேள்வி : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரோரணை தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன ?
பதில் : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக கையிலெடுத்து அதற்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் தீர்மான வரைவு அமையவில்லை. இது மிகவும் கவலை தரும் விடயமாகும். சிறிலங்கா அரசினைப் பொறுத்த வகையில் யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழின அழிப்பு போன்ற விடயங்களில் அனைத்துலக தராதரத்துக்கு அமைய விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதனையும், குற்றம் இழைத்த ஒரு தரப்பாக சிறிலங்கா அரசே இருப்பதனால் நீதி விசாரணைகளைச் செய்வதற்கான தகைமையும் அதற்குக் கிடையாது என்பதனை நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம்.
இதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணை அவசியம் என்பதனை இன்றும் வலியுறுத்தி வருகிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் அரசியற் காரணங்களுக்காக அனைத்துலக விசாரணை பரிந்துரை செய்யப்படவில்லை. எனினும் நாம் சுட்டிக் காட்டியபடி சிறிலங்கா அரசுக்கு இக் குற்றவியல் விசாரணைகளைச் செய்வதற்கு அரசியல் விருப்பும் தகமையும் கிடையாது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா தற்போது முன்வைத்திருக்கிற திருத்திய தீர்மான வரைபு இவ் விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசே முடிவுகளை எடுக்கும் நிலையினைத் தோற்றுவிக்கிறது. இதனால் இவ் விசாரணைப் பொறிமுறையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றே நாம் கருதுகிறோம்.
கேள்வி : அப்படியாயின் அமெரிக்கரின் பிரேரணையினை ஏற்றுக் கொள்கின்றீர்களா ?
பதில் : இத் தீர்மான வரைபினை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இத் தீர்மான வரைபு தீர்மானமாக நிறைவேற்றப்படும் போது இது மேலும் வலுவிழக்கக் கூடும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மாட்டாத ஒரு தீர்மானத்தை தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதேவேளை இத் தீர்மானம் தமிழ் மக்களின் விருப்பத்தை மீறிய வகையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய பலம் தற்போது தமிழ் மக்களிடம் இல்லை. இதற்காக நாம் இந்தத் தீர்மானத்துக்கு சம்மதம் கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் விருப்புக்கு மாறான வகையிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பதனை நாம் உரத்துச் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தாம் தேர்தல் காலத்தில் மக்கள் முன்வைத்த நிலைப்பாட்டுக்கு முரணாக இத் தீர்மானம் இருப்பதனை வெளிப்படையாகக்கூறி தமிழ் மக்களின் சம்மதமின்மையினை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்யத் தவறின் தமிழ் மக்களுக்கு நீதியினை வழங்காத ஒரு பொறிமுறைக்கு ஆதரவு வழங்கிய வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு கூட்டமைப்பு ஆளாக வேண்டி வரும். இதேவேளை எமது சக்தியை மீறித் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் நாம் வெறுமனே வார்த்தைகளில் எதிரப்பைக் காட்டிக் கொண்டிருப்பதனால் பயன் ஏதும் வரப்போவதில்லை.
சிறிலங்கா அரசுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை இப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை உன்னிப்பாகக் கண்காணித்து ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வெளிப்படுத்தி அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவை என்பதனை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
இதற்காக சட்ட, அரசியல் நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்றினை அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இக் குழுவில் இடம்பெறுவோர் பெயர் விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். இவர்கள் சிறிலங்கா அரசின் விசாரணைப்பொறிமுறையைக் கண்காணித்து சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பணியைச் செய்வார்கள்.
கேள்வி : சிறிலங்கா தொடர்பான விவகாரத்தினை அமெரிக்கா எவ்வாறு அணுகுகின்றது ?
பதில் : அமெரிக்கா தனது புவிசார் அரசியல் நலன்கள் சார்ந்த பார்வையின் ஊடாகவே இப் பிரச்சினையை அணுகுகிறது. இலங்கைத் தீவினில் சீனாவின் வளர்ச்சியையும் செல்வாக்கையும் கட்டுப்படுத்த வேண்டும். தாம் விரும்பும் வகையிலான ஒரு தாராளவாதக் கொள்கையினை தடையின்றி நடைமுறைப்படுத்தக் கூடியதோர் அரசாங்கம் இருக்க வேண்டும். இதற்கு மைத்தி;ரி-ரணில் அரசாங்கம் ஆட்சியில் வலுவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் இருக்கக்கூடாது.
அதே சமயம் மனித உரிமைகள் சார்ந்த அக்கறை தனக்கு இருக்கிறது என்பதனை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு உண்டு. சிறிலங்கா விடயத்தில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படக் கூடியவை. இதனால் தனது மனித உரிமை அக்கறையினை ஓரளவு வெளிப்படுத்தக் கூடிய வகையில் முதல் வரைபினை முன்வைத்து விட்டு ஏகமனதான தீர்மானமாக நிiவேற்றுவதற்கான கலந்துரையாடல் ஊடாக தீர்மானம் சிறிலங்காவுக்கு சாதகமான முறையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
கேள்வி : தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியதாக எதனை கருதுகின்றீர்கள் ?
பதில் : சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தகமையும் சாத்தியமும் கொண்டதாக நாம் கருதுகின்றோம். மனித உரிமை ஆணையாளர் நேற்று தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டது போல தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச குற்றங்கள் என்றும், அத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள், சர்வதேச விசாரணையாளர்கள், சர்வதேச வழக்குதொடுனர் அவசியமென குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேலதிக அம்சங்களை கொண்டுள்ளது. இத் தீர்மானத்தைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையாளரின் பணியகம் இவ்விடையத்தில் தொடர்ச்சியான ஈடுபாடு கொண்டிருக்கும் என்பதும் சர்வதேச சமூகத்தின் அவதானத்தில் சிறீலங்கா கண்காணிக்கப் படும் என்பதும் ஓரளவு உற்சாகம் தரும் அம்சங்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2013 டிசம்பரில் ஈழத் தமிழரைப் பாதுகாப்பதற்கு சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அவ்வகையான முழமையான பாதுகாப்பு பொறிமுறை பரிந்துரைக்க பாடாவிடினும் அவ்வாறான பொறிமுறையை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
குற்றங்கள் புரிந்த நாடு என்பதால் கண்காணிப்பும் அவதானமும் தொடர்ந்து இருக்கும் போது எமது மக்களுக்குத் தீங்கிழைப்பது ஓரளவு தணியுமென எதிர்பார்க்கலாம். ஆனாலும் நீதி வழங்கப் படாத வரைக்கும் சிங்கள அரசு மறைமுகமாக மேலும் கட்டமைப்பு சார்ந்த இனஒழிப்பு முயற்சிகளைத் தொடரவும் தமிழர் ஒரு தேசிய இனம் என்ற நிலையில் இருந்து தள்ளப்பட்டு சிறுபான்மையினர் என்ற வகையில் அவர்கள்மீது 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத விரும்பாத ஒரு அரசியல் தீர்வு திணிக்கப் படுவதற்கு இன்றைய நிலை வழி வகுக்கும் அபாயமும் நிறைய உண்டு.
கேள்வி : சர்வதேச மட்டத்தில் நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ?
பதில் : இன்றைய சர்வதேச ஒழுங்கின்கீழ் அரசுகள் அல்லாத குழுக்களும் அமைப்புகளும் தனி நபர்களும் கூட சர்வதேச நீதியினை பெற்றுக் கொள்வதற்கான வெளி திறந்துள்ளது. நாங்களும் முன்னர் கூறிய மாதிரி எல்லோருக்கும் உரித்தான உலகப்பொது நீதி வரம்பின் அடிப்படையில் அமைந்த உரிமையை (universal jurisdiction) கையில் எடுக்கும்படி பண்பட்ட நாடுகளிடம் கேட்க உள்ளோம். அதன் படி குற்றம் புரிந்த அரசியல் இராணுவ தலைவர்களை நாட்டுக்கு வெளியே கொண்டுவருவதற்கான (extradition) வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்.
ஆணையாளர் தனது அறிக்கைக்கு பயன் படுத்திய அதே சட்ட மதிப்பீடு தான் (legal standard குற்றவாளிகளை இவ்வாறு நாட்டுக்கு வெளியே கொண்டு வருவதற்கும் இயங்கவல்ல சட்ட மதிப்பீடாகும். இதைவிட சிறிலங்கா உட்பட ஏறத்தாள எல்லா நாடுகளுமே Genocide Convention எனப்படும் இனஅழிப்பு நியமம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் என்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் எந்த ஒரு நாடாயினும் சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல முடியும்.
அதற்கென மனித உரிமை ஆணையமோ பாதுகாப்பு சபையோ அங்கீகாரம் வழங்கத் தேவையில்லை. உலகளாவிய தமிழரும் மனித உரிமை ஆர்வலர்களும் செயலில் இறக்கப்படுவது தான் தேவை படுகிறது. இவற்றுக்கெல்லாம் நாம் நிகழ்த்திய கையெழுத்துப் போராட்டம் உதவி உள்ளது, அது போலவே நீதிக்கான மரம் நடுகைத் திட்டமென நாம் அறிவித்துள்ள செயல் திட்டமும் பூமியின் பாதுகாப்புக்கு உதவும் அதே நேரத்தில் நீதி பெறும் போராட்டத்துக்கும் உதவ வல்லது.
கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கி உள்ளமை பற்றிய உங்களது அபிப்பிராமயம் என்ன ?
பதில் : நடந்தேறிய தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏறத்தாள எல்லா தமிழ்த் தேசியக் கூட்டமைப சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் சர்வதேச விசாரணை என்றே பேசி வந்தார்கள். கலப்பு நீதி மன்றம் பற்றியோ ஏன் உள்நாடு விசாரணை என்றோ ஒருவர் கூடப் பேசவில்லை. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்கள் கூட அவையில் பேசும்போது சர்வதேச பொறிமுறை பற்றியே பேசினார். அதேவேளையில் கூட்டணியின் தலைவர்கள் வேறோர் நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்கள்.
அவர்கள் சர்வதேச சமூகம் எமது மக்களுக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கை இழந்திருக்கலாம். கள நிலைக்கு ஏற்ற வகையில் தமது அணுகுமுறைகளை இப்போது இடையில் மீள்திருத்தம் செய்திருக்கலாம். ஆனால் அப்படித் தான் இடையில் நிலையினை மாற்றினார்கள் என்றால் அதனை யூதர்கள் தம்மை இன அழிப்பு செய்து கொண்டிருந்த ஹிட்லரின் கொள்கைகளுக்கு அமைய பாதி வழியில் தமது நிலைப்பாட்டினை மாற்றி அமைப்பதுபோல இருக்கிறது.
கேள்வி : இந்தியாவுக்கு என்ன சொல்ல விருப்புகின்றீர்கள் ?
பதில் : அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் முதல் வரைவு பின்னர் சுருக்கப் பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று செய்திகள் வந்துள்ளன. தமது காஷ்மீர் பிரச்சனைக்கும் இதே பொறிமுறை பொருந்திவிடக் கூடாது என்பதற்காகத் தான் அப்படி நடந்து கொண்டார்கள் என்றும் சொல்லப் படுகிறது. இதெல்லாம் உண்மையென நாங்கள் நம்பவில்லை.
ஆனாலும் அது உண்மை என்றால் அது ஒரு தேவையின்றிக் கற்பனை பண்ணப் படும் அச்சம் தான். முள்ளி வாய்க்கால், காஷ்மீர் இரண்டும் ஒன்றல்ல. முள்ளிவாய்க்காலில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டது போல குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை, அவற்றின் தீவிரம், அவை நிகழும் திட்டமிட்ட முறை, மீண்டும் மீண்டும் அதே முறையில் நிகழ்வது, அவை சுட்டிக்காட்டும் நடத்துமுறை உறுதியாக ஒன்றேபோல இருப்பது ஆகிய அனைத்தும் அமைப்பு ரீதியாகத் திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்ட குற்றங்களாகும்.
முள்ளிவாய்காலில் இடம்பெற்றது ஓர் இனப் படுகொலை. காஷ்மீரை இதனுடன் ஒப்பிட முடியாது. அதனைவிட இந்திய தேசம் வலிமை மிக்க ஆரோக்கியமான நீதித் துறையைக் கொண்டது. சட்ட மீறல்களை தாங்களே கையாளக் கூடிய வல்லமை கொண்டது இந்திய நீதித் துறை. எமது மக்களுக்கு நடந்த அநீதிகளை அயலில் உள்ள இந்தியா இன்னும் கண்டும் காணாமல் இருந்து விட முடியாது. நலன்களின் அச்சில் சுழலும் அனைத்துலக உலக ஒழுங்கில் சிறிலங்கா அரசுடன் நல்ல உறவுகளைப் பேணுவுதன் மூலம் தாம் விரும்புவதைச் சாதிக்க முடியும் மரபுவழிச் சிந்தனை கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடரந்தும் நம்பிச் செயற்பட்டு வருகிறார்கள்.
இந்த மரபுவழிச் சிற்தனை காரணமாகவே கடந்த இந்திய அரசாங்கக்காலத்தில் தமிழின அழிப்புக்கு இந்தியாவும் துணைநின்றது என்ற அவப்பெயர் இந்திய நாட்டுக்கு கிடைத்தது. இந்திய நலன் குறித்து தொலைநோக்குப் பார்வையில் நோக்கின் இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசின் பக்கம் நிற்காமல் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதுதான் சாதகமானது என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பார்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.
அப்போதுதான் அனைத்துலக விசாரணை விடயத்திலும், தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்களிலும் இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முன்வரும். இத்தகைய கருத்து மாற்றத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தமிழகம் முன்னின்று முன்னெடுக்க வேண்டும்.