Breaking News

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – அரசாங்கம் கைவிரிப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, இலங்கையின் சட்டம், ஒழங்கு. மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன,

“நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது. ஆனால், அவர்களின் பிரச்சனைக்கு வரும் நொவம்பர் மாத நடுப்பகுதிக்குள் தீர்வு காணப்படும்.

பொது மன்னிப்பு என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு வழக்காக நாம் பார்க்கவுள்ளோம். சரியான சான்றுகளோ, வழக்குகளோ இல்லாமல் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்தால், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை படையினருக்கும் அத்தகைய பொதுமன்னிப்பை வழங்க வேண்டியிருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை இலங்கை அமைச்சரவை கடந்த வாரம் நிராகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டால், இலங்கை படையினருக்கும் பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.