அமெரிக்காவின் முன் இலங்கை தற்கொலை செய்துகொண்டுள்ளது
ஜெனிவா மாநாட்டில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணை என்ற இலட்சினை பொறிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்கு இணக்கம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் அமெரிக்கா முன்னிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளது என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி. குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
கொழும்பு அபயாராம விஹாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சக்திகளின் சதியிலிருந்து நாட்டை காப்பாற்றி விட்டதாக மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து நாட்டு மக்கள் முன்னிலையில் போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகின்றது. ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் போது அவர் எதனையும் சாதிக்கவில்லை. மாறாக அமெரிக்கா தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்கா முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமலேயே கடந்த மாதம் பிரேரணையை தாக்கல் செய்திருந்தது. கலப்பு நீதி மன்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படாமையும் உள்ளக விசாரணை என்ற இலட்சினை பொறிக்கப்பட்ட சர்வதேச விசாரணை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டமையும் தான் நாம் அவதானித்த வேறுபாடுகளாக உள்ளன.
குறித்த அறிக்கையில் 6 ஆவது சரத்தின் படி அது எவ்வித மாற்றமும் செய்யப்படாத பிரேரணை என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன் படி அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் யுத்தக் குற்ற விசாரணையை எந்த நீதி மன்றமும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் தான் மிகவும் சூட்சுமமான முறையில் காய்நகர்த்தி அமெரிக்கா தற்போது இலங்கையை முழுமையாக சர்வதேசம் சார்ந்த விசாரணைக்கு இணங்கச் செய்துள்ளது. இதுவே முதற் காரணியாகும்.
மற்றைய காரணியானது எமது நாடு இந்த பிரேரணையின் பிரகாரம் விசாரணை செய்ய முன்வராத பட்சத்தில் எமது நட்பு நாடுகளின் எதிர்ப்பையும் அமெரிக்கா எதிர்நோக்க வேண்டியிருக்கும். இதிலிருந்தும் அமெரிக்கா தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளது. ஆனால் எமது நாட்டு ஜனாதிபதி அறிக்கையை வெற்றிகொண்டதாக தாம் மார்தட்டிக் கொண்டிருக்கின்றார். இது இலங்கை அமெரிக்காவின் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்டதற்கு நிகரானது என்பதே எமது நிலைப்பாடு.
அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன் போது தேசபற்றுள்ள இயக்கங்கள் அவரை அமெரிக்காவின் கை பொம்மை என சாடியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் வருந்தினாலும் அவரை அவ்வாறு கூறுவதே நியாயமானது.
கடந்த சில நாட்களாக அவர் எமது நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது பிரித்தானியா, பிரான்ஸ் ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அந்நாடுகளுடன் வலுவான உறவை பேண வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவரை நாம் வேறு எவ்வாறு குறிப்பிடுவது?
இவ்வாறு நாட்டை தற்போதைய தலைவர்கள் காட்டிக்கொடுத்துவிட்டு தமது தவறுகளை மறைப்பதற்காக முன்னர் அமைச்சராக இருந்த போது தருஷ்மன் அறிக்கைக்கு எதிராக விமல் வீரவன்ச உபவாசம் இருந்தமையும் வெள்ளையர்கள் இலங்கை வந்த போது அவர்களை அவமதித்தமையும் தான் அறிக்கையின் காரம் அதிகரிக்க காரணம் என கூறுகின்றனர். இதன்மூலம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் முட்டாள்தனம் வெளிப்படுகின்றது.
அன்று எமது நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர்கள் பிரபாகரனை காப்பாற்றிச் செல்லவே வந்தனர். அவர்கள் செய்வது தவறில்லை என்றால் தேசப்பற்றுள்ளவர்கள் நாட்டை காப்பது எவ்வாறு தவறாக முடியும் என்ற கேள்வியை அரசாங்கத்திடம் கேட்கின்றோம். எவ்வாறாயினும் நேபாளத்தில் தற்போது 4 சமஷ்டி ஆட்சியுள்ள பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையை போன்று எமது நாட்டையும் பிளவு படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம்.
மறுபுறம் எமது நாட்டில் சர்வ கட்சி மாநாடு இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகின்றது. தேசிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் எதற்காக சர்வகட்சி மாநாடு? சர்வ கட்சி மாநாடு தற்போது நடத்த வேண்டியதல்ல. ஐ.நா. அறிக்கைக்கு முகம் கொடுக்கும் முன்னரேயே மாநாடு நடத்தப்பட்டு சகல கட்சிகளினுடைய நிலைபாடு தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய அரசாங்கத்தில் பங்கு கொண்டது போன்று இந்த மாநாட்டிலும் எதிர்க்கட்சிகள் பங்கேற்க கூடாது. மாறாக எதிர்ப்பையே வெளியிட வேண்டும்.