Breaking News

ஜெனீவா பேரவையுடன் இணைந்து செயற்பட தயார் ; ஸ்ரீலங்கா

மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனும், அவரது அலுவலகத்துடனும், ஐ.நா
மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைகளை சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுத்த தயார் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் மீது நேற்று புதன்கிழமை கலந்தாலோசனை நடைபெற்றுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா சார்பில் ஜெனீவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உண்மை கண்டறிதல், இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை உட்பட நல்லிணக்கத்தை அடைவதிலும், மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள், அமைப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய பொறிமுறைகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஐ.நா மனித உரிமை பேரவையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.