Breaking News

ஜெனிவாவில் திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக, கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசாரணையை நடத்த வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு  அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, கிறீஸ், லத்வியா, மொன்ரெனிக்ரோ, போலந்து. ருமேனியா, மசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

இலங்கை நேரப்படி, இன்று மாலை 4.55 மணியளவில் A/HRC/30/L.29 இலக்கத் தீர்மான வரைவு மீதான, விவாதம்  ஆரம்பித்தது.

முதலில், ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர் உரையாற்றினார். இதையடுத்து  தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளான மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

அதை அடுத்து சீனப் பிரதிநிதி உரையாற்றினார். தொடர்ந்து இந்த தீர்மானம் மீது உரையாற்ற வேறு நாடுகள்  முன்வராத நிலையில்,  சம்பந்தப்பட்ட நாடான இலங்கையின்  பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, தீர்மான வரைவை வரவேற்று தென்னாபிரிக்கா மற்றும் கானா  நாடுகளின் பிரதிநிதிகள்  உரையாற்றினர். இந்த நிலையில், தீர்மான வரைவு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் எந்த நாடும், வாக்கெடுப்பு நடத்தக் கோராத நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக – இலங்கை நேரப்படி மாலை 5.15 மணியளவில் அறிவிக்கப்பட்டது.தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியப் பிரதிநிதி பேரவையில் உரையாற்றினார்.