காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படுகிறது?
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்றை தமது ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்திருந்தார்.
காலப்போக்கில் போர்விதி மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தும் வகையில் அதன் விடயப்பரப்பை மஹிந்த ராஜபக்ச விஸ்தரித்தார்.
அத்துடன் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன்டி சில்வா தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பததிவுசெய்யப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் வரையிலான முறைப்பாடுகள் படையினருக்கு எதிராக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் இடைக்கால அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.
இந்த நிலையில் இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காணாமல்போனோர் தொடர்பில் விசேட ஆணைக்குழு நிறுவப்பட்டு, சட்ட அலுலகமொன்றை ஆரம்பிப்பதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் காணாமல்போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் குறைவு என்பதால் ஆணைக்குழு கலைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.