வலி-வடக்கு மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும் கண்ணகி முகாம் மக்கள் இணைந்து மேற்படி பிரதேசத்தின் பொது இடமொன்றில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வலி வடக்கு மக்கள் கடந்த 25 வருடங்களாக முகாம்களிலேயே பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் 25 வருட அகதி வாழ்க்கை போதும். இனியும் அகதி வாழ்க்கை வேண்டாம். எம்மை எமது சொந்த நிலங்களில் வாழவிட்டால் போதும் என்று கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசியல்வாதிகளாலும், அரச அதிகாரிகளாலும் பல உறுதி மொழிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவற்றை நிறைவேற்றவில்லை. இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இங்கு ஆட்சிக்கு வந்த புதிய அரசு உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வரும் மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதாக உறுதியளித்திருந்த போதிலும் மீள்குடியேற்றப்படாத நிலையே இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதும் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக சாதகமான எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் அவர்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருக்கின்றனர்.
இதனால் இனிமேலும் யாரையும் நாம் நம்புவதற்குத் தயாராக இல்லை. ஆகவே தான் எம்மை எமது மண்ணில் சென்று வாழ விடுங்கள் நாம் அதனைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை என்று தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த போதும் ஏமாற்றப்பட்ட வருகின்றோம். இதனாலேயெ இன்று இங்குள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் கண்ணகி ஆகிய இரு முகாம் மக்களும் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
இதற்கமைய இன்று முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பேராட்டத்தில் எந்தவித அரசியல் கலப்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.