மரண தண்டனைக் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
மரண தண்டனைக் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அத்துடன், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்த இந்த வாக்கெடுப்பின்போது, இலங்கை அரசாங்கம் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை நீதியமைச்சரின் இந்த கருத்தினை வரவேற்று இன்று வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் மரண தண்டனையானது மனித கண்ணியத்திற்கு முரணானது என்றும், மரண தண்டனையை அமுல்படுத்திய எந்தவொரு நாட்டிலும் குற்றச் செயல்கள் குறைந்தன என்று அறியப்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் மட்டும் 22 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 466 கைதிகள் தூக்கில் இடப்பட்டுள்ளதாகவும், மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை 28 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.