சிங்கள முஸ்லிம் குடித்தொகை யாழில் அதிகரிப்பு
யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அதிகளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை தமிழ் மக்களின் சனத்தொகை குறைவடைந்துள்ளது. இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிவரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை 107 இனாலும், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 198 இனாலும் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 114 குடும்பங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 501 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 11 ஆயிரத்து 56 தமிழர்களும், 981 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 264 முஸ்லிம்களும், 12 குடும்பங்களைச் சேர்ந்த 19 சிங்களவர்களும் இருந்தனர் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 114 குடும்பங்களினால் குறைவடைந்து ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 5 ஆயிரத்து 224 பேர் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிங்களவர்களின் எண்ணிக்கை 107 குடும்பங்களால் அதிகரித்து 119 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் வசிக்கின்றனர் என் றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆயி ரத்து 198 இனால் அதிகரித்து, 2 ஆயிரத்து 179 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 944 பேர் வசிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களக் குடும்பங்கள் யாழ். மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றன எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலணை, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 2 குடும்பங்களும், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 5 குடும்பங்களும், யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 4 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 17 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 74 குடும்பங்களும் வசிக்கின்றன என்று புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.