Breaking News

இலங்கையின் அபிவிருத்தி, கடல் கண்காணிப்புக்கு உதவவுள்ளது ஜப்பான்

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவவும், கடல்சார் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தவும், ஜப்பான் உதவ முன்வந்துள்ளது.

ஜப்பானுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேக்கு இடையில் நேற்று நடந்த இரண்டாவது சந்திப்பின் போது இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களை அடுத்து நேற்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில், அதிகாரிகள் மட்டத்திலான, பொருளாதார கொள்கை கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதாகவும், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவும், இந்த கூட்டறிக்கையில் இலங்கை பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இலங்கையில் நகர போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதென்றும் கூட்டறிக்கையில் இணங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களில், முக்கியமாக, கடல்சார் கண்காணிப்புக் குறித்து பேசப்பட்டதாக, ஜப்பானிய செய்தி நிறுவனமான கியோடோ தெரிவித்துள்ளது. இதன் போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு ஆற்றலைக் கட்டியெழுப்ப, ரோந்துப் படகுகளை வழங்குதல் உள்ளிட்ட, உதவிகளை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானியப் பிரதமர் தெரிவித்தார்.

கடல்சார் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு நாடுகளும், இந்த ஆண்டு இறுதியில் பேச்சுக்களை நடத்தவும் இணங்கியுள்ளன.மேலும், அடுத்த ஆண்டில் இலங்கையின் உள்ளூர் அரச அதிகாரிகள் 1800 பேருக்கு பயிற்சி அளிக்கவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றும், இணக்கம் காணப்பட்டுள்ளது.