போர்குற்ற விசாரணைக்கான தலைமையை கனடா ஏற்கவேண்டுமென கோரிக்கை
இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணையின் போது, அதன் தலைமைப் பொறுப்பை கனடா ஏற்று நடத்தவேண்டுமென கனேடிய தமிழ் கன்சவேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தக் குற்ற விசாரணை மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடியப் பிரதமர் ஹாப்பரும், அவர் சார்ந்த அரசும் போர்க்குற்ற விசாரணை மற்றும் மீளிணக்கத்திற்கான முயற்சி, மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் தமது பங்களிப்பை செலுத்தவேண்டுமென அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு சிறப்பு நீதிமன்ற யோசனைக்கு கனடா ஆதரவு தெரிவித்ததையடுத்து, தொடர்ச்சியாக நெதர்லாந்து, அயர்லாந்து, நோர்வே உள்ளிட்ட நாடுகளும் இணைந்து குரல்கொடுத்தமை சிறந்த முன்னுதாரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகளால் கிடைத்த சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஈழ மக்களுக்கு வழங்குவதற்கான பொறிமுறையை அமைக்க, மேற்குல நாடுகள் உதவவேண்டுமென்ற ஐ.நாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு 450 மில்லியன் டொலர்களை வழங்குவதாக கன்சவேட்டிவ் கட்சி தெரிவித்தபோதும், போர் நடவடிக்கைகளால் அதனை வழங்க முடியாமல் போனதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.