உள்ளக விசாரணை நம்பகரமாக அமைய வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் அகற்றப்பட்ட பின்னரே உள்ளக பொறிமுறை விசாரணை நடத்தப்படவேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டும் என்று ஜெனிவாவில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.பி.க்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில்,
இலங்கையில் அரசாங்கம் மாறி இருந்தாலும் கொள்கைகள் மாறவில்லை. வடக்கு முழுமையாக இராணுவமயப் படுத்தப்பட்டுள்ளது. சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறுகின்றன. எனவே, இவை இரண்டையும் செய்து கொண்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது.
உள்ளக விசாரணை நடத்த வேண்டுமாயின் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும். அப்போதுதான் நீதியை நிலைநாட்ட முடியும். இராணுவமயமாக்கலையும் சிங்கள குடியேற்றத்தையும் மேற்கொண்டு தமிழ்த் தேசியத்தை சிதறடிக்கவே இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதனை சர்வதேசம் புரிந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இதேவேளை இவ்விவாதத்தின்போது கலந்து கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை பரந்தளவில் சேகரித்துள்ள ஒரு அறிக்கை என்கிற வகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது.
பல தசாப்த கால யுத்தம், அவசர கால நிலை, மற்றும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளும் சூழல் என்பவற்றால் இலங்கையின் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறை சீரழிந்து போயுள்ளன என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் காரணமாக இப்படியான ஒரு விசாரணைக்கு உள்ளகப்பொறிமுறை ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்பதை ஐ.நா. அறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆனால், நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான தகைமை இல்லை என்பதை விட, அரசாங்கம் மாறியிருக்கின்ற போதிலும் இலங்கை அரசுக்கு அப்படியான நீதி விசாரணைப்பொறிமுறை ஒன்றிற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதே முக்கியமானதாகும். இந்த அடிப்படையின் பிரகாரம், மேற்குறிப்பிட்டவாறு சிதைந்து உருக்குலைந்து போயுள்ள சிறிலங்காவின் சட்டத்துறையானது பூரணமான ஒரு மீளுருவாக்கத்திற்கு உள்ளாக்கப்படும் வரையிலும், எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய எந்தவொரு குற்றவியல் நீதிவிசாரணைப் பொறிமுறையிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது. அல்லது அவர்களது பிரசன்னம் இருக்க வேண்டுமெனில் ஆகக்குறைந்தபட்சம், ஐ.நா.சபையினால் நிர்வகிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு குற்றவியல் நீதிவழங்கும் பொறிமுறையின் கீழாக ஒரு சிறிய பங்களிப்பை வழங்கலாம்.
ஆனால், கவலைக்குரிய விடயமாக, ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் உத்தேச பிரேரணை வரைவானது ஒரு குற்றவியல் விசாரணை ஒன்றை நடைமுறைப்படுத்தக்கோரி நிற்கின்றபோதிலும், மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் நீதித்துறை மீதான குறைபாடுகளை கருத்தில் எடுக்கத்தவறியிருக்கிறது. நிறைவாக, இலங்கையில் நியாயமான பொறுப்புக்கூறலும் நீதியும், முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் என்பதே, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தொகையாயுள்ள தமிழர்களின் திடமான நம்பிக்கை என்பதை இங்கு வெளிப்படுத்துகிறேன் என்றார்.
அனந்தி
இந்த விவாதத்தில் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையை வரவேற்கின்றோம். ஆனால், அமெரிக்க பிரேரணை எமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. யுத்த முடிவின்போது மே 18ஆம் திகதி நான் எனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனவே யுத்தக் குற்றத்துக்கு நான் ஒரு நேரடி சாட்சியாக இருக்கின்றேன்.
எனவேதான் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணையை கோருகின்றோம். ஆனால், நாங்கள் தற்போது ஏமாற்றப்பட்டதாக உணருகிறோம். எனவே, சர்வதேசம் இந்த விடயத்தில் உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.
வட மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதையும் இந்த சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்றார்.