கே.பி. குறித்து 4 விசாரணை அறிக்கைகள்
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான குமரன் பத்ம நாதன் என்ற கே.பி. தொடர்பில் நான்கு விசாரணை அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளதாகசட்ட மா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
கே.பி.யை. கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் தாக்கல் செய்த மனு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமைநீதிபதி விஜித் மலல்கொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இந்த விடயத்தை மன்றுக்கு தெரியப்படுத்தினார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த நான்கு விசாரணை அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டதாகவும் அவை கடந்த ஜூன் 4, ஜூன் 19, ஜூலை 21 மற்றும் ஒக்டோபர் 15 ஆகிய திகதிகளில் மேன் முறையீட்டு மன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
விஜித்த ஹேரத் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணையில், கே.பி. தொடர்பில் செய்யப்பட்டுள்ள விசாரணை நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே கால அவகாசத்தை மேன் முறையீட்டு மன்று வழங்கியிருந்த நிலையிலேயே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந் நிலையிலேயே விசாரணை அறிக்கையை மன்றுக்கு தாக்கல் செய்துவிட்டதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த விசாரணை அறிக்கைகள் நான்கும் வழக்குக் கோவைக்குள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அந்த அறிக்கைகள் நான்கையும் வழக்குக் கோவையில் இணைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அது வரை கே.பி.இற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையும் தொடரும் என நீதிமன்றம் அறிவித்தது.