நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்-முதல்வரின் மனந்திறந்த பேட்டி
மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் தொடர்பாக
உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை சாத்தியமாகுமென நினைக்கவில்லை என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நான் நானாகவே இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. தீர்மானம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…
கேள்வி:- இராணுவ ஆளுநர், பிரதம செயலாளர் மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது வடமாகாண சபையின் செயற்பாடுகளில் எவ்வாறான மாற்றங்கள் காணப்படுகின்றன?
பதில்:- நல்லமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இராணுவ அதிகாரியாக இருந்து அதன் பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமையால் அவருடைய போக்கும் நிருவாக செயற்பாடுகளும் வித்தியாசமாக அமைந்திருந்தன. அந்தக்காலம் தற்போது மலையேறிவிட்டது.
வெளிநாட்டு இராஜதந்திர சேவையில் செயற்பட்ட ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று முன்னர் அரசாங்க அதிபராக செயற்பட்ட ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் பல விடயங்களில் எம்மை அனுசரித்து சுமுகமாக செல்லக்கூடியவர்களாகவே இருக்கின்றார்கள்.
ஆனால் சில மாவட்ட செயலாளர்கள் எமக்கு இடையூறளித்துவருகின்றார்கள்.
அவர்களிடம் மத்திய அரசாங்கத்தைச் சார்ந்தவர்களே கேள்வியெழுப்ப முடியும் என்ற தோரணையில், ஆணவப்போக்கில் சில இடங்களில் செயற்படுகின்றார்கள். இவர்களினால் எமது நிருவாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பாக அண்மையில் வடக்கிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தேன். அதன்போது அவர்கள் மக்களுக்காகவே செயற்படுகின்றார்கள். ஆகவே அவர்கள் அனைவருடனும் இணைந்தே செயற்படவேண்டுமென்றே குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
கேள்வி:- வடமாகாண சபையில் ஏகோபித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றபோதும் சபைக்கு வெளியே தாங்கள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றதொரு நிலைமை காணப்படவில்லையே?
பதில்:- வடமாகாணசபை அமையப்பெற்று இரண்டு வருடங்களாகின்றது. இதுவரையில் நிருவாக ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஒன்றிணைந்து நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எம்மிடையே சரியான புரிந்துணர்வு ஏற்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளை கொண்டிருக்கின்றது. அவற்றில் வேறுபட்ட சிந்தனைகளும் கொள்கை வேறுபாடுகளும் காணப்படக்கூடும்.
அதேபோன்று சிலர் மாவட்ட ரீதியாக செயற்படுவதால் அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வேறுபடுகின்றன. ஆகவே ஒரு கட்சிக்குரிய ஒன்றிணைந்த பிரதிநிதிகளாக நீங்கள் எங்களை கருதக்கூடாது. நாம் வெவ்வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.
புரிந்துணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு பல பயிற்சி நெறிகளையும், செயற்றிட்டங்களையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். அவ்விதமான செயற்பாடுகள் நிறைவுறும் பட்சத்தில் பல சாதகமான விளைவுகளை எதிர்பார்க்கமுடியும்.
கேள்வி:- வடமாகாண சபை உருவாகி இரண்டு வருடங்கள் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றனவே?
பதில்:- எமக்கு பலவிதமான சிக்கல்கள் காணப்படுகின்றன. 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தாமையே அதற்கு காரணமாகின்றது. பலவிடயங்கள் குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றபோதும் மத்திய அரசாங்கம் பாராமுகமாகவே இருந்து வருகின்றது.
எனவே ஏனைய மாகாணங்களைப்போன்று எம்மை கருதமுடியாது. அவை 20,25வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றன. ஆகவே இரண்டு வருடங்கள் என்பது போதுமானதாக இல்லை. அத்துடன் அலுவலர்களின் திறன், அனுபவம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் காணப்படுவதனால் வெவ்வேறுபட்ட சிந்தனைகள், கொள்கைகள் காணப்படுவதாக கூறியுள்ளீர்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கருத்தியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அமைப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பதில்:- கூட்டமைப்பில் தலைமைத்துவங்களுக்கிடையிலேயே சில கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. எமக்கிடையில் தனிப்பட்ட முறையில் எவ்விதமான வேற்றுமைகளும் இல்லை. ஆனால் சில விடயங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உதாரணமாக கூறுவதானால் எந்தளவிற்கு மத்திய அரசாங்கத்தை நம்பலாம் என்ற விடயத்தில் சில கேள்விகள் உள்ளன.
சிலர் அதனை சாதகமாக கருதுகின்றார்கள். சிலர் எதிர்மறையாக கருதுகின்றார்கள்.
ஆகவே இவ்விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையொன்றின் மூலம் தான் முடிவொன்றுக்கு வரமுடியும். அப்பேச்சுவார்த்தைகள் உரிய காலத்திலே சரியாக அமையுமென நம்புகின்றோம்.
கேள்வி:- இங்கு நடந்தது ஒரு இனப்படுகொலையே என பிரேரணை நிறைவேற்றினீர்கள். அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளருடனான சந்திப்பையடுத்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மீண்டுமொரு பிரேரணையை நிறைவேற்றினீர்கள். ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் 30ஆவது கூட்டத்தொடரில் கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். எனினும் அமெரிக்க தீர்மானம் அவ்வறிக்கையை நீர்த்துப்போகச் செய்துள்ளதாக ஆய்வாளர்களால் கூறப்படுகின்ற நிலையில் அதனை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றுள்ளனவே?
பதில்:- இதுவொரு சிக்கலான வினாவாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையையும் அவரின் கருத்துக்களையும் நாம் முழுமையாக வரவேற்கின்றோம். அறிக்கை வெளியிடப்பட்டால் அது தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளுமே தீர்மானிக்கின்றன.
அவ்வாறிருக்கையில் விசாரணை தொடர்பான விடயத்தில் மத்திய அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் முன்னரேயே சில புரிந்துணர்வுகள் ஏற்பட்டிருப்பதாக தற்போது தெரிகின்றது.
பிரித்தானியா அமெரிக்காவுடன் இணைந்து சென்றமைக்கான காரணம் என்னவென வினவியபோது பல விடயங்களில் இலங்கை அரசாங்கம் அடம்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் அமெரிக்கப் பிரேரணையில் கூறப்பட்ட விடயங்கள் நீர்த்துப்போனவையாக இருந்தாலும் பரவாயில்லை. இவ்வாறானதொரு செயற்றிட்டத்திற்குள் இலங்கையை கொண்டு வந்துவிடவேண்டுமென்ற அடிப்படையிலேயே பிரித்தானியா அவ்வாறு செயற்பட்டதாக அறியவந்துள்ளது.
ஐ.நா. அறிக்கையை அமெரிக்க பிரேரணை நீர்த்துப்போகச் செய்துள்ளது என்ற கருத்தில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் எதற்காகவென சிந்திக்கும்போது பலவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. இலங்கை ரோம் உடன் படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அரசாங்கத்தை எவ்வளவு தூரம் பலாத்காரப்படுத்தலாம் என்பதில் பிரச்சினையிருக்கின்றது. நடைமுறைச்சாத்தியம் சாத்தியமற்ற தன்மை என்பதனை அடிப்படையில் கொண்டே இவ்வாறானதொரு முடிவு எட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றேன்.
கேள்வி:- வடக்கு மக்களின் பெரும்பான்மை ஆணைபெற்ற சபை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கையில் பொதுத்தேர்தலில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆணைகேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தீர்மானத்தை வரவேற்றிருக்கின்றதே?
பதில்:- எம்முடன் நெருங்கியிருந்த பிரித்தானியா என்ன காரணத்திற்காக அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது என்பதை முன்னதாகவே குறிப்பிட்டேன். அதேபோன்றுதான் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக அவ்வாறு கூறினார்களோ தெரியவில்லை. ஆகவே அவ்விடயம் தொடர்பாக என்னால் உறுதியாக கூறமுடியாது.
கேள்வி:- தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் பொறிமுறை அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் எனக்கருதுகின்றீர்கள்?
பதில்:- உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை சாத்தியமாகுமென நினைக்கவில்லை. கடந்த மாதம் 30ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன். பொறிமுறையை வகுத்து இவ்வாறு செயற்படவேண்டுமென குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது. ஆனால் எவ்விதத்தில் அதனை நடைமுறைப்படுத்தப்போகின்றீர்கள் என்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என்பதை குறிபிட்டிருக்கின்றேன்.
வடமாகாண முதலமைச்சர் என்பதற்கு அப்பால் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற அடிப்படையில் இச்சட்டங்களை எவ்வாறு உள்நாட்டு சட்டங்களுடன் இணைக்கப்போகின்றீர்கள் என்பதை எடுத்துரைத்திருந்தேன்.
போர்க்குற்றங்கள் இழைக்கப்படும் போது அவை எமது நாட்டில் குற்றங்களாக இருக்கவில்லை. ஆகவே நாம் காலத்தால் பின்நோக்கிய சட்டமொன்றை அமைக்கவேண்டியுள்ளது. அதனை எவ்வாறு கொண்டுவரப்போகின்றோம். அதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் தருமா? புதிய அரசியல் அமைப்பை கொண்டுவரவிருக்கின்றார்கள். அதில் இவ்விடயங்களை உள்வாங்குவார்களா என்பது குறித்து எமக்கு தெரியாது.
அது மட்டுமல்ல, உள்ளகம் எனக்கூறும்போது விசாரணை நடத்துவதற்காக இங்குள்ள சட்டத்துறை தலைமை அதிபதியை அல்லது ஓய்வுபெற்றவொருவரை நியமிக்கலாம். அவர்களால் எமக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது.
சட்டத்துறை தொடர்பான குறைபாடுகளை முன்னரே இங்கு வருகை தந்திருந்த நிபுணர்குழுவினர் கூறியுள்ளார்கள்.
அதேநேரம் வெளிநாட்டை சேர்ந்தவொருவரை நியமிக்கின்றார்களென கருதுவோம். அவருக்கு இங்குள்ள சட்டத்துறை தலைமை அதிபதியின் காரியாலயத்தை சேர்ந்தவர்களே உதவியாளராக இருக்கவுள்ளானர்.
ஆகவே அவருக்கு வழங்கப்படவுள்ள தரவுகள் அனைத்தும் சரியா தவறா என்பதை எம்மால் கூறமுடியாது.
இங்குள்ள நீதிபதிகளையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நீதிபதிகளின் கருத்துக்கள் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பது கேள்விக்குரியதாகும். சட்டங்களை இயற்றி உள்வாங்குவதில் பிரச்சினைகள் இருக்கின்றன. வழக்கு நடத்துநர் யார்? எவ்வாறு கடமை புரியப்போகின்றார் என்பதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.
அதேநேரம் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டு வரவிருக்கின்றார்கள். புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாகவும் கூறுகின்றார்கள்.
கடந்த காலத்தில் சாட்சியமளித்தவர்கள் மீண்டும் சாட்சியமளிக்க வேண்டிய நிலை உருவாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. ஆகவே இவ்வாறான பொறிமுறை எமக்கு நன்மைபயக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இதுவரையில் எவருமே இப்பொறிமுறையில் நன்மை இருக்கின்றதாக என்னிடத்தில் கூறவில்லை. உங்களுடைய வினா போன்றே எனது மனதிலும் கேள்விக்குறியுள்ளது.
கேள்வி:- இப்பொறிமுறை ஒரு சர்வதேச விசாரணையாகும். தென்னிலங்கை எதிர்ப்புக்களுக்காகவே கலப்பு விசேட நீதிமன்றம் என்ற பதம் அகற்றப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் ஒரு தரப்பினரும் பிறிதொரு தரப்பினர் அவ்வாறில்லையெனவும் இருவேறுபட்ட நிலையில் இருக்கின்றார்களே?
பதில்:- கருத்தொற்றுமையில்லை என்றே கூறமுடியும்.
கேள்வி:- பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில்:- நான் சர்வதேச விடயங்களைப் பற்றி பேசினால் மாகாண முதல்வராக இருக்கும் எனக்கு எமது நாடு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிடுவதற்கு என்ன உரிமை இருக்கின்றதென கேள்வியெழுப்புகின்றார்கள். தெற்கு மக்களுக்கு அங்குள்ள அரசியல் வாதிகள் இவ்வாறான கருத்துக்கள் மூலம் வேறுபட்ட காட்சியை காண்பிக்க முயல்கின்றார்கள்.
எனினும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எமது கருத்துக்களை பெற்றுக்கொள்கின்றார்கள்.
பொறிமுறை குறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்பதை உன்னிப்பாக அவதானிப்போம். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்போம்.
கேள்வி:- சமாதானத்தை கட்டியெழுப்பும் ஐ.நா.வின் செயற்றிட்டத்தில் வடமாகாண சபை எவ்வாறான பங்களிப்பை வழங்கவுள்ளது?
பதில்:- அச்செயற்றிட்டத்தில் உள்ளகப்பொறிமுறை, நல்லிணக்கம், மீள்குடியேற்றம், எமது சபைக்கு சில நன்மைகளை தருவது ஆகிய நான்கு விடயங்கள் காணப்படுகின்றன. முதல் மூன்று விடயங்களும் அரசாங்கத்திற்கு நன்மையளிப்பதாக உள்ளதே தவிர எமக்கு எவ்விதமான நன்மைகளும் ஏற்படுத்துவதாக இல்லை.
மார்ச் மாதத்திலே ஐ.நா அறிக்கையை தாமதித்து வெளியிடுவதாக அறிவித்து விட்டு ஏப்ரல் மாதத்தில் இவ்விடயத்திற்கான நிதி வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கனவே உள்ளகப் பொறிமுறை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே அர்த்தமாகும்.
எம்முடன் கோபித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை செய்ய முடியும். எம்முடன் அது குறித்து இதுவரையில் பேசவில்லை. இராணுவ வெளியேற்றம் தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களுமின்றி எவ்வாறு மீள்குடியேற்றத்தைச் செய்ய முடியும்.
ஆகவே இவற்றை வைத்துப் பார்க்கையில் எமக்கு சார்பாக எவருமே செயற்படுவதை காணமுடியாதுள்ளது.
என்னைப்பொறுத்தவரையில் நடைமுறையில் இச் செயற்பாடு எவ்வளவு சிக்கல்களை கொண்டிருக்கின்றது, மக்களுக்கு எவ்விதமான நட்டங்களை ஏற்படுத்தும் போன்ற விடயங்களை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்துவதே அதியுச்ச கடப்பாடாக இருக்கின்றது. அதனைவிடவும் என்னால் செய்யக்கூடியது எவ்வளவு என்பது இதிலேயொரு கேள்விக்குறியாகும்.
கேள்வி:- முதலமைச்சர் நிதியத்தை நிறுவுவதற்கு என்ன தடைகள் காணப்படுகின்றன?
பதில்:- அனைவரும் தமிழர்கள் என்பதால் அரசாங்கத்திற்கு அக்கட்டமைப்பை வழங்குவதற்கு அச்சமாகவுள்ளது. முன்னர் பதவியில் இருந்த ஆளுநர் எமக்கு அக்கட்டமைப்பை தர மறுத்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆட்சேபனையில்லையென தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் குறித்த நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பு குழுவில் மத்திய வங்கியின் வெளிவளத்துறை பிரதிநிதியையும் உள்வாங்கப்படவேண்டுமென கோரியுள்ளார்கள்.
அவ்வாறான நிலைப்பாட்டைத் தெரிவித்தவுடன் ஏனைய மாகாணங்களுக்கு அவ்வாறு நியமிக்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டினேன். அத்துடன் குறித்த பரிந்துரை தொடர்பாக பரிசீலித்துக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- வடமாகாணத்திற்கு அதிக தேவைப்பாடுகள் காணப்படுகின்றமையை புதிய ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைத்தீர்களா? புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் தேவைகளை உள்வாங்கும் வகையில் ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்தல்களைச் செய்வார்களா?
பதில்:- ஜனாதிபதி தேர்தலிலைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் பதவியேற்றபின்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட தயாரிப்பின் போது எமது தேவைப்பாடுகள் தொடர்பாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எம்மிடம் கேட்டிருந்தார். அது குறித்த பூரண தகவல்கள் அவரிடத்தில் சமர்பித்திருந்தோம்.
தற்போது எம்மிடம் எவ்விடயங்களும் கோரவில்லை. எதிர்வரும் நாட்களில் அவ்விடயங்கள் குறித்து கோரப்படுமாயின் வழங்குவோம். ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பது குறித்து தற்போது எந்தமுடிவுகளும் எடுக்கப்படவில்லை.
கேள்வி:- வடமாகாண சபை முதலமைச்சராக நீங்கள் பதவியேற்றவுடன் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர் என்பதால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ஆபத்தானவர் என தென்னிலங்கையால் விமர்சிக்கப்பட்டீர்கள். இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்ற விடங்களில் தங்களின் அழுத்தமான போக்கு இனரீதியான விரிசலை ஏற்படுத்த முயல்வதாக பிரசாரப்படுத்தப்படுகின்றதே?
பதில்:- ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது அவர்களுக்கு விளங்கும் வகையில் நான் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அவர்களது மொழியிலேயே கூறியதோடு எமது பிரச்சினைகளை தௌிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனவும் எடுத்துரைத்திருந்தேன்.
ஜனாதிபதியுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி அவருடன் இணைந்து பயணிக்கின்றபோதும் குறித்த தினமன்றி மதிய உணவுக்கு இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டபோது வடக்கிலிருந்து இராணுவத்தை வௌியேறச் சொல்லும் நான் அங்கு எவ்வாறு வருகை தருவது எனக் கேள்வியெழுப்பியிந்தேன். ஜனாதிபதி புன்னகைத்தவாறு நீங்கள் செல்லுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றிருந்தார்.
ஒரு விடயம் குறித்து எவ்வாறான மூலோபாய அனுகுமுறைகளைச் செய்வது என்பதே மிக முக்கியமானதாகும். என்னுடனிருந்த சில அமைச்சர்கள் இராணுவ முகாமிற்குச் சென்று மதிய உணவு அருந்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதால் நன்மைகளைப் பெறமுடியும் எனக் கருதியிருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் அவ்வாறு சென்று காரியங்களை சாதிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய கொள்கைகளைத் தாண்டி செல்லமுடியாது. அந்தவிதமான போக்குகள் எமக்கு நன்மையளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மத்திய அரசாங்கத்துடன் தற்போது கொண்டுள்ள உறவுகள் வேறுபட்டுள்ள நிலையில் உங்களுடைய உறுதியான நிலைப்பாடுகளை சாதித்துக்கொள்ள முடியுமென கருதுகின்றீர்களா?
பதில்:- சாதித்துக்கொள்ள முடியுமா இல்லையா என்பது குறித்து கூறமுடியாது. 67வருடங்களுக்கு முன்னதாக சாதிக்க முடியுமென நம்பிக்கை கொண்டிருந்தபோதும் அது முடியாது போயிருக்கின்றது. எனினும் என்னால் சாதிக்க முடியுமென கூறவில்லை. ஆனால் விட்டுக்கொடுத்துச் செல்ல முடியாது.
கேள்வி:- நடைபெற்ற பொதுத்தேர்தலில் நீங்கள் அறிவித்திருந்த முடிவால் தற்போது முரண்பாட்டு நிலைமை உருவாகியிருக்கின்றதா?
பதில்:- முரண்பாடு ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. நான் ஒரு கட்சிக்குச் சொந்தமானவன் அல்ல. என்னைப்பொறுத்தவரையில் மக்களே மிக முக்கியமானவர்கள்.
கேள்வி:- உங்களை வெற்றிபெறச் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களுமே பிரசாரம் செய்திருந்தார்களே?
பதில்:- நானாக நான் இருந்தமையாலே என்னை முதலமைச்சராக்க வேண்டுமென அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்தார்கள். ஆகவே நான் எந்தவொரு கட்சிக்கும் சொந்தனமானவன் அல்ல. கட்சிகளே என்னை ஏற்றுக்கொண்டன என்பதே யதார்த்தமானதாகும்.
கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் காணப்படுகின்றன.
அவர்கள் ஒவ்வொரு விதமான கொள்கைகளைக்கொண்டிருக்கின்றார்கள். மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர்களே எமக்கு தேவையானவர்கள். தான்தோன்றித்தனமாகவோ தன்னிச்சையாகவோ சுயநலம் கருதியோ நடவடிக்கைகள் எடுப்பவர்களிலும் பார்க்க மக்கள் சார்பாக உண்மையான மனோநிலையை வைத்திருப்பவர்களே எமக்குத் தேவை. அதனையே வலிந்து கூறினேன்.
ஆகவே நான் கட்சிக்கு எதிராக செல்லவில்லை.
வீட்டை விட்டு சென்று காலையிலேயே வாக்களியுங்கள் எனக் கூறியதால் தமது கட்சி சின்னத்தை விட்டு வௌியேறச் சொன்னதாக கருதுக்கள் வௌிப்படுத்தப்பட்டன. கனவில் கூட அவ்வாறு நினைக்கவில்லை. விட்டை விட்டு சைக்கிளில் ஏறி வாக்களியுங்கள் எனக் கூறியிருந்தால் ஒருவேளை அது தவறாக இருந்திருக்கும். நான் அவ்வாறு கூறவில்லையே.
பிரித்தானியாவில் நடந்த கூட்டமொன்றில் நான் வேறுபட்ட கருத்துக்களைக்கொண்டிருப்பதால் பிறிதொரு கட்சியில் இணைந்தால் என்ன எனக் கேள்வியெழுப்பினார்கள்.
அதன்போது எமக்குள் கருத்து வேற்றுமைகள் இருப்பது உண்மை. அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொள்வோம். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே இருப்பேன் எனக் கூறியிருந்தேன்.
ஆகவே நான் பொதுத் தேர்தலில் காலத்தில் ஒதுங்கியிருக்க விரும்பினேனே தவிர கட்சிக்கு எதிராக செயற்படவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்.
கேள்வி:- எவ்வாறாயினும் இந்த தீர்மானம் இன்று விரிசலை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுமா?
பதில்:- விரிசல் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மைதான். இது குறித்து நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும். அரசியலில் எத்தனையோ பேர் எதிரும்புதிருமாக இருந்தாலும் பின்னர் இணைந்து கொண்ட வரலாறுகளும் உள்ளனவே. ஆகவே அதனை பெரிதாக கூறவில்லை.
கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கிடைத்திருக்கின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- சம்பந்தனின் வாழ்வில் அதுவொரு மைல் கல். அவர் சிரேஷ்ட அரசியல்வாதி. நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். உயர்பதவியொன்றுக்கு தெரிவாகியுள்ளார். அந்தவகையில் அது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
கேள்வி:- அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான நிதியம் அமைக்கப்படவேண்டுமெனக் கூறியிருந்தீர்களே அச்செயற்திட்டம் தற்போது எந்நிலையிலுள்ளது?
பதில்:- அந்நிதியத்தை ஆரம்பிப்பதில் சில நெருக்கடிகள் காணப்படுகின்றன. அதுவொருபுறமிருக்கையில், சுவிஸ்லாந்தின் அனுசரணையுடன் சட்ட உதவி திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைவாக யாழ்ப்பாணம்,மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய ஐந்து இடங்களில் அவர் செயற்படவுள்ளார்கள்.
சட்ட உதவி வழங்கும் இடங்கள் குறித்த மாவட்டங்களில் காணப்படும் நீதிமன்றங்களிலேயே காணப்படுகின்றன. ஆகவே சட்ட உதவி தேவையானவர்கள் அவர்களை அனுகமுடியும். அதேநேரம் குறித்த அரசியல் கைதிகளின் வழக்குகளுக்காக அவர்களது குடும்பங்களுக்கு தேவையான பண உதவியை வழங்குவதற்கான செயற்திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- வடக்கும் கிழக்கும் இணைந்தால் அது சிறந்தவிடயமாகும். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தற்போதிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
முன்பிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மஜித்துடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவதற்காக சந்தித்திருந்தபோதும் அவர் அரசியல் விடயங்கள் குறித்து பேசுவதற்கு தயாராக இருந்திருக்கவில்லை. ஆகவே அவரின் மனோநிலையை புரிந்து அவருடன் பேசவில்லை.
கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள விரிசல் மாகாணசபை செயற்பாடுகளுக்கு தடையாகவுள்ளதெனக் கருதுகின்றீர்களா?
பதில்:- பிரதமருடன் விரிசல் காணப்படுகின்றதென்றால் ஜனாதிபதியுடன் எனக்கு நெருங்கிய உறவிருக்கின்றது. எவ்வாறாயினும் இவை இரண்டுமே எமக்கு பெரிதாக எதனையும் தருவதாக இல்லை. நடைமுறையிலே நல்ல சூழல் ஏற்பட்டிருக்கின்றதே தவிர எமக்கு நன்மை தரும் சூழலொன்று ஏற்படவில்லை.
கேள்வி:- இலங்கை – இந்திய ஒபந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை கட்டமைப்பின் நிலைமை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?
பதில்:- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு வருகை தந்தபோது இவ்விடயம் தொடர்பாக கூறியிருந்தேன். எனினும் அவர் எவ்விதமான பதிலையும் அளித்திருக்கவில்லை. எனினும் கடந்த ஆட்சியாளர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தார்.
தற்போதைய நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதால் 13 தொடர்பில் பேசுவதில் பயனில்லை.
கேள்வி:- 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிராகரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை கட்டமைப்பால் சுயாதீனமாக எதனையுமே செய்யமுடியாதென உணருகின்றீர்களா?
பதில்:- கடந்த காலத்தில் கிழக்கு முதல்வராக இருந்த பிள்ளையான் வைத்தியசாலையில் ஒரு தாதியைக் கூட நியமிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட அதேநிலையில் தான் நாம் இருக்கின்றோம். 13ஆவது திருத்தச்சட்டம் பலவிதங்களில் எம்மை கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வைத்துள்ளது. அந்த வரையைக்குள் நின்றே செயற்படவேண்டியிருக்கின்றது.
இதிலிருந்து நாம் என்னத்தை சாதிக்கபோகின்றோமெனக் கேள்வியொன்று இங்குள்ளது.
நாம் இங்கு இல்லாது பிறிதொரு தரப்பினர் இருந்திருப்பார்களேயானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறி தமது பைகளை நிரப்பியிருப்பார்கள். அல்லது இங்கு அரசாங்கத்தின் வேண்டத்தகாத செயற்பாடுகளை முழுமையாக ஆதரித்து முன்னெடுக்க இடமளித்திருப்பார்கள்.
நன்றி: வீரகேசரி (2015-10-21)