மைத்திரிபால நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி!
யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையானது நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளகப் பொறிமுறையின் கீழேயே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட விடயங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை மக்களுக்கும் புதிதானவை. இது தமக்குப் புதிய அனுபவமாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட விசாரணைப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் திறந்த மனதுடன் இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் டைம்ஸ்சுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகள் எவரும் உள்ளூர் நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கு இலங்கை இடமளிக்காது. அரசியலமைப்பை மாற்றாது சர்வதேச நீதிமன்றமொன்றை நாட்டுக்குள் அமைப்பது சாத்தியமற்றது என்பதுடன், இது மிகவும் சிக்கலானது என ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்டையே தான் பொறுப்பேற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெல்வதே தான் எதிர்கொண்ட பாரிய சவால் என்றும், இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது என நம்புவதாகவும் கூறியுள்ளார். சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றிருப்பதற்கான ஆதாரங்கள் பற்றிக் கேட்டபோது, முந்திக்கொண்டு பதிலளித்த அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஆகியோர் அமர்ந்திருந்த விருந்துபசார மேசையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைமை ஆசனத்தை வழங்கியிருந்தார் எனக் கூறியதாக நியூயோர்க் டைஸ்ம் குறிப்பிட்டுள்ளது.