உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்படாது?
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்தினால்நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை மட்டுமே நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளக விசாரணைகளின் ஒரு பகுதியாக உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்றார்.
இந்த நிலையில் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழும் பட்சத்தில் அவருக்கு மன்னிப்பு அளிப்பதற்கு பிறிதொரு சபை ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் கூடி ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.