Breaking News

தேசிய பொறிமுறை மூலமே ஜெனிவா யோசனை செயற்படுத்தப்படும்: ராஜித



மெக்ஸ்வல், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஜெனிவா யோசனைக்கு பின்னர் வெளியிடப்பட்டதால் நாட்டுக்கு பெரும் நன்மை நடந்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் வெள்ளைக்கொடி மற்றும் சார்ள்ஸ் கொலை என்பன பற்றி பாரதூரமான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த அறிக்கை ஜெனிவா யோசனைக்கு பின்னர் வெளியிடப்பட்டதால் நாட்டுக்கு பெரும் நன்மை நடந்துள்ளது.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு விசேட நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்வது பாரிய விடயமல்ல.

பரணகம அறிக்கை தயாரிக்க முன்னாள் ஜனாதிபதி மூன்று வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்வது புதிய விடயமல்ல. பண்டாரநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரின் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி பெறப்பட்டது.

ஜெனிவா அறிக்கையை எதிர்க்கட்சியின் முழுமையாக வாசிக்கவில்லை. அதற்காக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் விஹாரமகாதேவி பூங்காவில் கூட்டங்களை நடத்தி கூச்சல் போடுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் தேசிய பொறிமுறை ஒன்றின் மூலம் மாத்திரமே ஜெனிவா யோசனை செயற்படுத்தப்படும். இதற்கான வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மாத்திரம் பெறப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்