யுத்தக் குற்றம் – இலங்கை நீதிமன்றில் சாட்சியமளிக்க தயார்: கெலம் மக்ரே
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாரென சனல் 4 ஊடகவியலாளரும் பிரபல ஆவண தயாரிப்பாளருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
சர்வதேச பங்களிப்புடன் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறை இலங்கையில் உருவாக்கப்பட்டால் மாத்திரமே தாம் சாட்சியமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர் சார்பில் தாம் சாட்சியமளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், சாட்சியங்களை வழங்கியவர்கள் குறித்த தகவல்களை வெளியிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் கொலை தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்து இன சமூகங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தக்குற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் சாட்சியங்களை திரட்டிவந்த கலம் மக்ரே, இலங்கை குறித்த சரச்சைக்குறிய ஆவணப்படங்களை தயாரித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இவற்றில் குறிப்பாக அண்மையில் வெளியிட்ட ‘நீதிக்கான தேடல்’ ஆவணப் படத்தில், பாதிக்கப்பட்டோரின் குரல் வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து முதலாவது காணொளியை சனல் 4 ஊடாக வெளியிட்டதும் இவரே. யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்கவும் தாம் தயாரென கலம் மக்ரே ஏற்கனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.