மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி
மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கொண்டிருப்பதாக, அவர் மீது கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், மரண தண்டனையானது பாரபட்சமான முறையில் அமுல்படுத்தப்படுவதாகவும், அதை அமுல்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
எனினும், மரண தண்டனையை ஒழிப்பதில் தனக்கு உடன்பாடு கிடையாது என, அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது இந்த நிலைப்பாட்டை விமர்சித்துள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான மார்ட்டின் ஓ மலி, மேரிலான்டில் மரண தண்டனை இல்லாது செய்யப்பட்டமையைச் சுட்டிக்காட்டி அவர், மரண தண்டனையானது நியாயமான முறையில் அமுல்படுத்தப்பட முடியாதது எனத் தெரிவித்தார்.
கொள்கைகளைப் பொறுத்தவரை, எது பயன்தரக்கூடியது என்பதில் ஹிலாரி கிளின்டன், எப்போதுமே சற்றுப் பின்தங்கியிருப்பதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.