எமது இனத்தை பழிதீர்க்க அரசாங்கமே துணைபோகின்றது - மஹிந்த அணியினர் குற்றச்சாட்டு
தமிழீழத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியிலும் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கியத்துவம் வகிக்கின்றனர். ஒரு இனத்தை திருப்திப்படுத்த மட்டுமே அரசாங்கம் செயற்படுகின்றது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியான மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர்.
எமது இராணுவத்தை தண்டிக்க புலிகளின் வாக்குமூலங்களை ஆதாரமாக்க முயற்சிக்கின்றனர் எனவும் அவ் அணியினர் குறிப்பிட்டனர்.
மஹிந்த ஆதரவு அணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக் ஷவை சர்வாதிகாரியாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சியை எமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் விமர்சித்த அணியினர் இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆனால் எம்மை விமர்சித்ததை விடவும் பலமடங்கு அதிகமான வகையில் சர்வாதிகார போக்கை இந்த அரசாங்கம் கையாள்கின்றது.
அதேபோல் மஹிந்தவால் செய்ய முடியாததை நாம் செய்து காட்டுவோம் என எமக்கே இவர்கள் சவால் விடுத்தனர். ஆனால் நாம் செய்யாத ஒரு விடயத்தை மட்டுமே இவர்களால் செய்து காட்ட முடிந்துள்ளது.அதாவது நாம் தடுத்த தமிழீழத்துக்கான கொள்கையை பலப்படுத்தி பிரிவினைவாதிகளின் கைகளில் நாட்டை கொடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப நாட்டில் ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர்.
இதை நாம் தடுத்து மக்களை எமது பக்கம் பலப்படுத்த முயற்சிக்கும் சந்தரப்பங்களில் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எமது ஜனாநயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். பாராளுமன்றத்தில் எமது தரப்பின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றது. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம் தீட்டுகின்றனர். எம்மையும் எமது இனத்தையும் பழிதீர்க்க அரசாங்கமே துணை போகின்றது.
ஒருபுறம் புலம்பெயர் புலிகளை பலப்படுத்தி தமிழீழத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும் அதேவேளை மேற்கத்தேய நாடுகளின் அடிமைகளாக எம்மை மாற்றியமைத்து எமது பொருளாதார கொள்கைகளையும், வளங்களையும் அவர்களிடம் விற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே இந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜனநாயக நாடாக எமது நாட்டை கட்டியெழுப்பும் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
நாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம் . யுத்தத்தின் போதும் நாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டே நாம் செயற்பட்டோம். அப்போதும் எம்மை ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கம் என விமர்சித்தனர். ஆனால் நாம் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்தோம்.
இப்போதும் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் ஒரே நோக்கத்தில் நாம் போராடி வருகின்றோம். ஆனால் சிறைச்சாலை பயத்தை காட்டி எம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் சிறைச்சாலைகளை காட்டி எமது விடுதலைப்போராட்டத்தை தடுக்க முடியாது. வெள்ளையர்களின் கொள்கையையும் அவர்களது திட்டத்தையும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் தோற்கடிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் ஒரு இனத்தின் நலன்களை மட்டுமே கவனத்தில்கொண்டு செயற்படுகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளையும் அவர்களின் நிகழ்ச்சிநிரல்களையும் மட்டுமே முன்னெடுத்து செல்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,
இன்று பாராளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி என ஒன்று இல்லாது போய்விட்டது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவும், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தவும் அரசாங்கம் விரும்பாத காரணத்தினால் இன்று தமது தேவைக்கு ஏற்ப எதிர்க்கட்சியை அமைத்துள்ளனர். தமிழீழத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்துடைப்பு எதிர்க்கட்சியாக நியமித்துள்ளனர். அதேபோல் எம்மை விமர்சிக்கவும் எமக்கு எதிராக கருத்துகளை பரப்பவும் மக்கள் விடுதலை முன்னணியை விலைகொடுத்து வாங்கியுள்ளனர். அதையும் மீறி நாம் செயற்பட ஆரம்பிக்கும்போது எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது வாய்களை மூடிவிடுகின்றனர்.
அதேபோல் நாட்டில் பொருளாதாரமும், விவசாய நடவடிக்கைகளும் முழுமையாக வீழ்ச்சிகண்டுவிட்டன. கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளது. ஆகவே இப்போதாவது மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொள வேண்டும் என்றார்.