Breaking News

ஐ.நா தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது : சித்தார்த்தன்

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான பிளாட் அமைப்பின் தலைவர் டி சித்தார்த்தன்.


இலங்கையில் 26 ஆண்டுகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் நேற்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சியைத் தவிர்த்த மற்ற கட்சிகள் ஏற்கனவே இது தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு கருத்து வெளியிட்டு வந்தன.

நேற்று வியாழக்கிழமை ஐநா மன்றத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேறியுள்ள நிலையில் அந்த கட்சிகளின் கருத்து என்ன என்று பிளாட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் டி சித்தார்த்தன் இது தொடர்பில் தெரிவிக்கும்போது, இது இலங்கை அரசுக்கு சாதகமான தீர்மானம் என்று கருத்துத் தெரிவித்தார்.

இந்த பொறிமுறை நியாயமாக செயற்படமுடியுமா என்பது குறித்து தமக்கு இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும், இதை இப்போதைக்கு எதிர்க்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த விசாரணை பொறிமுறை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிலவினாலும் தாமும் தமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடருவதாகவும் அவர் கூறினார்.