Breaking News

இலங்கைக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம்

போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு, இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியுள்ளதன் மூலம், நீதி வழங்குவதிலும், மோசமான அனைத்துலக சூழலில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலும் அனைத்துலகத் தலையீட்டின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படடுள்ளது.

இது செயற்பாட்டில் இறங்க வேண்டிய நேரம்.

இலங்கைக்கு ஆலோசனை வழங்கவும், நீதி, பொறுப்புக்கூறல், கடந்தகால வன்முறைகள் மீள நிகழாமல் உறுதிப்படுத்துவதற்கும், சட்ட மற்றும் நிறுவக மாற்றங்களின் ஊடாக நீதித்துறை மற்றும் உண்மை கண்டறியும் செயல்முறையிலும், அதனுடன் இணைந்து பயணிக்கவும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இலங்கையுடன் பரந்தளவில் ஈடுபாடு காட்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.