வடக்கு மாகாணசபைக்கு நேரடி உதவி வழங்க முடியாது – அமெரிக்க உயர் அதிகாரி கைவிரிப்பு
வடக்கு மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அவர்,யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக தகவல் வெளியிட்ட யாழ். ஆயர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது, ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும், தாங்கள் நேரடியாக வடமாகாணசபைக்கு உதவி செய்ய முடியாது என்று அமெரிக்க குழுவினர் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டார்.
பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் மற்றும், அதிகாரிகள் குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.இடம்பெயர்ந்து இன்னும் சொந்த வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதுள்ளவர்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது, கணவனை இழந்த பெண்களுக்கு இலங்கை அரசிடமிருந்து உரிய முறையில் உதவி கிடைக்காத நிலைமை, யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் பாவனையைக் குறைப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியாவிட்டால், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து யாழ் ஆயர், அமெரிக்க குழுவினருக்கு விபரித்துக் கூறியிருந்தார்.
அதையடுத்து, வட மாகாண முதலமைச்சர், சிவி.விக்னேஸ்வரனை, கத்தரின் ருசெல் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அப்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவ வேண்டும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்தை, ஏனைய மாகாணங்களைப் போல நோக்காமல், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகக் கவனத்திற்கொண்டு, அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த மாகாணாத்தில் உள்ள 80 ஆயிரம் கணவனை இழந்தபெண்களின் வாழ்வாதாரத்திற்காக குழு மட்டத்திலான வேலைத்திட்டங்கள், சிறுகடன் திட்டம் போன்றவற்றை செயற்படுத்துவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் தனது திட்டங்களை வடக்கின் மீது திணிக்காமல், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நடைபெற்றவற்றின் உண்மை நிலையைக் கண்டறிந்து, அதனை சிங்கள மக்களையும் உணரச் செய்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கத்தரின் ருசெல் அம்மையாரிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.