சர்வகட்சி குழுக் கூட்டத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை! விக்கிரமபாகு கேள்வி
சர்வகட்சி மாநாடு என்ற பேரில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டுக்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல வருடங்கள் குரல்கொடுத்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் தேசிய நல்லிணக்கத்துக்கு எதிராக இனங்களுக்கு எதிராக செயற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை ஆபத்தானதாகும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய நல்லிணக்கத்தை விரும்பாத கட்சிகளின் செயற்பாட்டினால் மீண்டும் சிறுபான்மையினருக்கு அநீதியே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு நேற்றுக் காலை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
‘இன நல்லிணக்கத்துக்காக பல வருடங்களாகக் குரல் கொடுத்த நவசமசமாஜக்கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை. மாறாக இன நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்பட்ட பல கட்சிகளுக்கு சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் நாட்டில் இன நல்லிணக்கத்தை உருவாக்க இவர்களால் முடியாது. அவ்வாறான கட்சிகளினால் மீண்டும் இனவாதமே வளர்க்கப்படும்.
இவர்கள் மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலே செயற்படுவார்கள். இது நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்குக் காரணமாக அமையும். சர்வகட்சி மாநாடு என்று அழைக்கும் போது அனைத்துக் கட்சிகளும் அம்மாநாட்டில் பங்குபற்றும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஜெனிவா ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு எதிராக சில கட்சிகள் குரல் கொடுத்தன. ஆர்ப்பாட்டங்கள் செய்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகவும் ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவாகவும் நாம் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சர்வகட்சி மாநாடு ஒன்றினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததையடுத்து நாம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தைக் கூட நாம் ரத்துச் செய்திருந்தோம். இவ்வாறு நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்காக செயற்பட்ட எமது கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள்
சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணிலின் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் எந்த நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று ஏற்கனவே கடந்த நல்லாட்சியில் அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்றுச் சபையில் மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது நாட்டில் 1971 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின் போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகும்.
ஆனால் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமிழர்களாகும். ஆனால் அவர்களை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக்கூடாது. அனைவரும் சட்டத்தின் முன்பு சமமாக கருதப்பட வேண்டும் என்றார்.