லசந்த கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு
சண்டே லீடர் பத்திரகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகள் மற்றுமொரு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
படுகொலைச் சம்பவம் குறித்த ஆதாரங்களை முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் அழித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் மேலும் ஓர் சுற்றின் ஊடாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை மா அதிபரிடம் விரைவில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
லசந்த கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட குறிப்புப் புத்தகம் மற்றும் இந்த சம்பவம் குறித்த கல்கிஸ்ஸ காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் அறிக்கை ஆகியவற்றை காணாமல் போகச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பிலான சந்தேக நபர் ஒருவரான இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவரை விடுதலை செய்வதற்கும் இந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.லசந்த கொலை தொடாபில் சில இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு செல்லிடப்பேசிகளை இந்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.செல்லிடப் பேசி சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டையை வழங்கிய நுவரெலியாவைச் சேர்ந்த ஜேசுதாசன் என்பவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.