Breaking News

சிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அரசியல் கைதிகள் யாருமில்லை!

குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று இலங்கையின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள, தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க  பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தகவல் வெளியிட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார,

“குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத கைதிகள் எவரும் தற்போது சிறைகளில் இல்லை. தண்டனை விதிக்கப்பட்ட 48 தமிழ் கைதிகள் உள்ளனர். 116 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களிலும், 62 பேருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றங்களிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தண்டனை விதிக்கப்படாத, வழக்கு விசாரணையில் உள்ள கைதிகளையே விடுவிக்க முடியும் என்றும், தண்டனை அனுபவிக்கும் கைதிகளை ஜனாதிபதியே விடுவிக்க முடியும் என்றும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, பிணையில்“ விடுவிக்க முடியும் என்றும் அதற்கு நீதிமன்றங்களுக்கு பரந்தளவிலான அதிகாரங்கள் உள்ளதாகவும், மூத்த சட்டவாளர் க.நீலகண்டன் கூறியுள்ளார்.