தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும் - ஹக்கீம்
கடந்த அரசாங்கத்தினால் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் சென்னை சென்றிருந்த அமைச்சர் ஹக்கீம், சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் அவர் கருத்து வெ ளியிடுகையில்
"சென்னையில் நடைபெறும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழாவில் பங்கேற்று உரையாற்றுவதற்காக வந்துள்ளேன். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அரசுகளிடையே நல்ல சுமூகமான உறவு உள்ளது. தொடர்ந்து அது நல்ல முறையில் நீடிக்க வேண்டும். அதற்காக இரு நாட்டு அரசுகளும் உரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதாகவும் அப்படி பிடிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும் பிரச்சினைகள் உள்ளன. தற்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்தால் அவர்களை கைது செய்வதோடு ரூ. 15 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல சுமூக உறவை பாதுகாக்க இலங்கை அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்.
இந்திய - இலங்கை இரு நாடுகளுக்கிடையோயான சுமூக உறவு என்பது பாராம்பரிய அடிப்படையில் உருவாகியது.அதற்கு பழுது ஏற்படாத வகையில் இருநாட்டு மீனவர்களினதும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மிக விரைவில் நல்ல தீர்வு ஏற்படும். தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே மீண்டும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு உறுதியாக உள்ளது. தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நீண்ட இடைவெ ளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார்.
இது ஆரோக்கியமான அரசியல். அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்ட இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும். இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்க் குற்றம் நடந்திருப்பதாக விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு பாதுக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும்" என்றார்.