அரசியல் கைதிகளை விடுவித்தால் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும்! குணதாச எச்சரிக்கை
சிறைகளில் இருக்கும் புலிகளை விடுவித்த நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இவர்களை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் எனவும் அவ் இயக்கம் எச்சரித்தது.
நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து மஹிந்த ஆதரவு அணியின் முக்கிய அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவ் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் இயக்கத்தை எமது நாட்டில் மட்டுமல்லாது உலகில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக கருதுகின்றனர். இவர்களின் ஆயுதப் போராட்டமும், தமிழீழக் கொள்கையும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகும். கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் சர்வதேச மட்டத்தில் இந்த போராட்டமும் தமிழீழத்துக்கான முயற்சிகளும் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இருக்கையில் புலிகளுடன் தொடர்புடைய நபர்களை முன்னைய அரசாங்கம் கைதுசெய்து தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூலமாக சர்வதேச மடத்தில் இயங்கும் புலி உறுப்பினர்களை அடையாளம் காணவும் திட்டம் இருந்தது. ஆனால் இப்போது இந்த நபர்களை அரசியல் கைதிகள் என்ற பெயரில் விடுவிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இவர்களை விடுவித்து நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கமே முயற்சிக்கின்றது. இவர்களை விடுவித்தால் இவர்களின் மூலமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் இலங்கையில் இயங்க ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச மட்டத்தில் புலிகள் பலமாக இயங்கி வருகின்ற நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை பிரிக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள் என்ற அச்சம் இன்றும் உள்ளது. அரசாங்கத்திற்கும் இது நன்றாகவே தெரியும்.
எனினும் இவை அனைத்தையும் தடுக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. புலம்பெயர் அமைப்புகளின் ஆதரவிலும் மேற்கத்தேய நாடுகளின் ஆலோசனையிலும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆகவே அவர்களுக்கு விசுவாசமான வகையில் அரசாங்கம் இங்கு செயற்பட்டு வருகின்றது. இப்போதும் புலிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டிருப்பதும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே தவிர வேறு எந்தவொரு காரணமும் இல்லை.
இப்போது அரசாங்கமே புலிகளை விடுதலை செய்தால் இவர்கள் புலிகளை ஆதரிப்பதாக அமைந்துவிடும். அதேபோல் இப்போது இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஈழத்திற்கான போராட்டம் மீண்டும் ஐந்தாம் ஈழப்போராக உருவெடுக்கும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என்றார்.