இன்று யாழ் வருகிறார் அமெரிக்க அதிகாரி கத்தரின் ருசெல்
இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் அம்மையார் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் அவர், இன்று காலை 10.15 மணியளவில், யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அதையடுத்து, காலை 11.15 மணியளவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர், பிற்பகல் 12.45 மணியளவில், பாலின சமத்துவத்துக்காக பணியாற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார். பிற்பகல், 2.30 மணியளவில், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர் கொழும்பு திரும்பவுள்ளார். இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும், செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத- மூடப்பட்ட சந்திப்புகளாகவே இருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கொழும்பு திரும்பும், கத்தரின் ருசெல் அம்மையார், இன்று மாலை 6.15 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்த, பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், நாளை வரை கொழும்பில் தங்கியிருப்பார்.