28ம் திகதி இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்
அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டதால் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 86 பேரும் எதிர்வரும் 28ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கடந்த 2011 மே மாதம் முதல் இதுவரை 73 கடிதங்கள் வாயிலாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரை, முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பயனாக இலங்கை சிறைகளிலுள்ள 86 தமிழக மீனவர்களும் வரும் 28ம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படும் மீனவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நல்லெண்ண அடிப்படையில் தமிழக சிறையிலுள்ள இலங்கை மீனவர்கள் 2 பேரையும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடி மீனவர்களை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு, அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.