Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு – பொதுமன்னிப்பு இல்லை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை அடுத்தமாதம் முதல் வாரத்துக்குள் எடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உயர் மட்டக் கூட்டம் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காவல்துறைமா அதிபர் என்.இலங்கக்கோன், பிரதி சட்ட மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் மற்றும் அவர்களின் வழக்கு விசாரணைகள் தொடர்பான நிலவரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதையடுத்து. தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க முடியாது என்றும், இதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனால் சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள, கைதிகளையும், வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகளையும் பிணையில் விடுவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. நவம்பர் முதல் வார முடிவுக்குள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.