தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் – பதில் கூறாமல் நழுவினார் ஐ.நா பொதுச்செயலர்
தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.
‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’வின் செய்தியாளர் கார்த்திகேயன் ஹேமலதாவுக்கு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். இந்த செவ்வியின் போது, “இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் அமைதியின்மை நிலவிய போது, தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்களா?” என்று, ஐ.நா பொதுச்செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு, நான் ஊக்கமளித்தேன். அவர் சரியான திசையில் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன். நிலுவையில் உள்ள இந்த விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நான் கலந்துரையாடினேன். உங்களுக்கும் கூடத் தெரியும், நான் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தேன்.
இலங்கை அரசாங்கமும் கூட, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்தது. அவர்கள் சில முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் போதுமானதாக இல்லை. கடந்த காலத்துக்கான நீதி, என்ன நடந்தது, மற்றும் மேலும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது ஆகிய பொறுப்புக்கூறலுக்கான இந்த எல்லா செயல்முறைகளும் உண்மையானதென்று நான் நம்புகிறேன்.
இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை நான் மதிக்கிறேன். மனித உரிமைகள் நிலை கவலையளித்தது. இது எமது முன்னுரிமையான விடயம். ஐ.நா பொதுச்செயலர் என்ற வகையில் நான், மனித உரிமைகள் முயற்சிகளை வெளிப்படையாக ஆரம்பித்தேன். இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் என்னுடன் இணைந்து நடக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.