வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் தவறினால் களத்தில் இறங்குவோம்! என்கிறது கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எதிர்ப்புத் தெரிவிக்கும் இனவாதிகளின் கருத்துக்களுக்கும், அமைச்சரவையின் குழப்பங்களுக்கும் நாம் பொறுப்பல்ல. எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் எமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எமக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளைஅரசாங்கம் மீறினால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடரும் எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டது.
தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துக்குள் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பி கேள்விக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிபிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
யுத்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க நாம் பல காலமாக போராடி வருகின்றோம். கடந்த காலத்தில் இருந்து நாம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எமக்கு சாதகமான முடிவு கிட்டவில்லை. முன்னைய அரசாங்கத்திடம் பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியபோதும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய சிலரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் அப்போது எமக்கு வாக்குறுதிகளை வழங்கினர்.எனினும் அவை வெறும் ஏமாற்று வார்த்தைகளாகவே அமைந்தன.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனநாயக ரீதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தில் எமது பிரதான பிரச்சினைகள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்ட காலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நோக்கத்தில் பல முயற்சிகளை எடுத்து வந்துள்ளோம். அதேபோல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தாம் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டத்தை ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமையவே கைவிட்டனர். அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்த காரணத்தினாலேயே அவர்கள் தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோர் எழுத்துமூல வாக்குறுதியையும் வழங்கியுள்ளனர்.
ஆகவே அதன் அடிப்படையில் எமக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதியும், அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவையில் உள்ள சிக்கல்கள், இனவாதிகளின் கருத்துக்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. எவ்வாறாயினும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்.
ஆனால் இந்த விடயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் அரசாங்கம் எங்களை எமாற்றுமாயின் நாம் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி வரும். தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான போராட்டத்துக்கு தடையாகவோ அல்லது அவர்களை புறக்கணிக்கும் வகையிலோ செயற்படமாட்டோம் என்றார்.