Breaking News

போர்க்குற்றத்தில் என்னை சிக்கவைக்க தீவிர முயற்சி - மஹிந்த

என்னையும் எமது இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்சியை தக்கவைக்கவே ரணில் முயற்சிக்கின்றார். போர்க் குற்றத்தில் என்னை சிக்கவைக்கும் அதி தீவிர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் இராணுவத்தை காப்பாற்ற எந்த கூண்டிலும் ஏறத் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறை இருக்கும் போது சர்வதேச தரப்பை அழைப்பது எமது நீதிச் சேவையை அவமதிக்கும் செயலாகும். இதற்கு எனது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர்க்குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாராஹென்பிட்டி அபேயராம விகாரையில் பெளத்த மதத்தலைவர்களை சந்தித்து ஜெனிவா விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் தனது நிலைபாட்டினை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்

இன்று நாடு பாரதூரமான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் நான் ஆட்சிசெய்த காலகட்டத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் காரணத்தினாலும், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எனது கருத்தையும் தெரிவிக்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மற்றும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பலனை இப்போது அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிரேரணையில் நாட்டை பாதிக்கும் வகையிலும், எமது இராணுவத்தை குற்றவாளியாக சிக்கவைக்கும் யோசனைகள் பல உள்ளன.

ஜெனிவா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைய இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவற்றை விசாரிக்கும் விசாரணை பொறிமுறையின் போது சர்வதேச தலையீடுகளே அதிகமாக கையாளப்படுகின்றது. எமது சட்டங்களை புறக்கணிக்கும் வகையில் சர்வதேச நீதி முறைமைகளை கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நடுநிலையாக அமையாது

அதேபோல் இலங்கையில் நடத்தவிருக்கும் விசாரணை பொறிமுறைகளுக்கு சர்வதேச தரப்பில் இருந்து நிதி உதவிகள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எந்த வகையிலும் நடுநிலையாக அமையாது. இலங்கைக்கு வரவிருக்கும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் அவர்களுக்கான தொழிநுட்ப உதவிகளுக்கு வெளிநாட்டு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு வெளிநாடுகளின் நேரடி தலையீடுகள் இருக்கும்போது எமது அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டுள்ளமை பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

எமது அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவிலும் புலம்பெயர் நபர்கள் எழுத்துமூல வாக்குமூலங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது சர்வதேச தரப்பில் இருந்தும் எமக்கு உதவலாம் என்பதற்காகவே நாம் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதேபோல் நாம் சர்வதேச யுத்தகுற்ற விசாரணையாளர்களின் ஆலோசனைக்கு அமையவே இதை செய்தோம்.

எமக்கு அவ்வாறு கொடுக்கவேண்டும் என்ற ஒரு கடமை இருந்தது. அதற்காகவே அவ்வாறு எழுத்துமூல அறிக்கைகளை வழங்கக்கோரினோம். எனினும் நாம் அவ்வாறு சர்வதேச தரப்பிடம் முன்வைத்த அறிக்கைகளை வெளிப்படுத்த இந்த அரசாங்கம் விரும்பவில்லை. நாம் மேற்கொண்ட சில முக்கிய விடயங்களை இவர்கள் மூடி மறைத்துவிட்டனர்.

மனித உரிமை மீறல் தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது காணாமல் போனோர் தொடர்பிலான பரணகம அறிக்கை தொடர்பில் தெரிவித்தனர். இது என்னை காப்பாற்ற உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்றும் விமர்சித்தனர். எமது தேவைக்கு ஏற்ப விசாரணைகளை நடந்ததாகவும் குற்றம் சுமத்தினர். காணாமல் போனோர் தொடர்பில் கண்டறிய எனது அரசாங்கமே பரணகம ஆணைக்குழுவை நியமித்தது. ஆனால் ஜனவரியின் பின்னர் இந்த விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் கீழேயே நடைபெற்றது. இப்போது இது அரசாங்கத்தின் ஆணைக்குழுவாக்கும்.

இப்போதும் இந்த ஆணைக்குழுவை எனது ஆணைக்குழு என கூறுவது தவறானது. இப்போதைய ஜனாதிபதிக்கும் இதில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர்களின் தேவைக்கேற்ப அறிக்கையை மாற்றியமைக்க முடியும்.

சர்வதேச தரப்பு விசாரணையாளர்களை இவர்கள் அழைக்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகின்றது.அதாவது இலங்கையில் உண்மைகளை கண்டறிய சரியான நீதி செயற்பாடுகள் இல்லையென்பது வெளிப்படுகின்றது. உள்நாட்டு நீதிமன்ற செயற்பாடுகள் இருக்கும் போது சர்வதேச தரப்பை அழைப்பதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். இவ்வாறு செயற்படுவதனால் எமது நீதிச் சேவையை அவமதிக்கும் வகையில் அமைந்துவிடும்.

யுத்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும் அவர்களை தண்டிக்கவும் ஐ.நா தீர்மானம் சுட்டிக்காட்டுயுள்ளது. அதை எமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. குற்றம் சுமத்தும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லாத போதிலும் அவர்களை சந்தேகத்தின் பெயரில் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இலங்கையிலேயே யுத்தம் நடந்தது. இதில் இராணுவ குற்றம் நடந்திருந்தால் அதை எமது சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். ஆனால் சர்வதேச சட்டங்களை இங்கு நடைமுறைபடுத்த எந்த அனுமதியும் இல்லை.

அமெரிக்கா தண்டிக்க முற்படுகிறது

இன்று அமெரிக்கா எமது இராணுவத்தை தண்டிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஆனால் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்க மாட்டார்கள். அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இராணுவம் என்ன செய்தாலும் ஜனாதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்தின் பயன்படுத்தி இராணுவத்தை காப்பாற்ற முடியும். அந்நாட்டு அரசாங்கம் தமது மக்களையும் இராணுவத்தையும் அவ்வாறு பாதுகாக்கின்றது. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு அல்ல. முதலில் எமது இராணுவத்தை காட்டிக்கொடுத்து தமது தலைகளை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இப்போதும் என்னையும் எமது இராணுவத்தையும் காவுகொடுத்து தமது ஆட்சியை தக்கவைக்கவே பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார். போர்க்குற்றங்களில் என்னை சிக்கவைக்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் எனது தரப்பு நியாயத்தை முன்வைக்கவும் எமது இராணுவத்தை காப்பாற்ற எந்த கூண்டில் ஏறவும் நான் தயாராக உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.