நாங்கள் பிரிவினைவாதிகள் அல்லர் - சி.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரிவினைவாதக் கட்சி அல்ல. அத்துடன் நாங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது சிங்களவருக்கோ எதிரானவர்களும் அல்ல. பிரிவினைவாதிகளும் அல்ல என வடமாகாண அவைத் தலைவர் கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்திற்கும் வடமாகாணத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலான அனுபவப் பகிர்வு கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அங்கு பங்கு கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மத்திய மாகாண சபையினராகிய நீங்கள் இந்த மாகாண சபை முறைமையின் கீழ் ஆரம்ப காலங்களில் இருந்தே செயற்பட்டுள்ளீர்கள். ஆனால் வடமாகாண சபையினராகிய நாங்கள் இந்த முறைமையில் தற்போது இரண்டு வருடங்களையே பூர்த்தி செய்திருக்கின்றோம். இவ்வாறான நிலைமையில் இம்முறைமையின் அனுபவம் உடைய உங்களுடைய ஆலோசனைகள் எமக்குக் கிடைப்பது நன்மையாக அமையும்.
மேலும் நாங்கள் இந்த முறைமையில் இரண்டே ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும்கூட இந்த முறைமையிலுள்ள பல குறைபாடுகளையும் மாற்றங்களின் தேவைகளையும் நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். எனினும் இந்த நாட்டிலே இருக்கக்கூடிய 9 மாகாணங்களிலும் பொதுவான மாற்றங்கள் தேவை என்பதை நாங்கள் உணர்கின்றோம்.
குறிப்பாக மாகாண சபை முறைமையிலே ஜனநாயகத் தன்மை புகுத்தப்படவேண்டும் என அவசியம் எதிர்பார்க்கின்றோம். மிக முக்கியமாக நிதி சார்ந்த விடயங்கள் ஆளுநருடைய அதிகாரத்திலிருப்பது மாற்றப்படல்வேண்டும்.
ஒரு சபையினுடைய வரவு – செலவுத்திட்டத்தை சபையில் சமர்ப்பிக்கும்போது அதனை ஆளுநரே அறிவிப்பார் என இச்சட்டம் கூறுகின்றது. இந்த ஏற்பாடு ஜனநாயகத் தன்மைக்கு பலமான அடியாக இருக்கிறது. எனவே இத்தகைய மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படல்வேண்டும்.
தற்போது அரசியல் நிலை மாறிவிட்டது. நல்லிணக்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றை நோக்கி அரசாங்கம் நடைபோடுகின்றது. அத்துடன் நாம் எமது நாட்டை நேசிக்கின்றோம். வடமாகாணத்தவர்கள் சிறப்புமிக்கவர்கள். அவர்கள் ஏனைய சமயம், ஏனைய இனம் என்பவற்றை மதிப்பவர்கள். அவர்கள் ஏனையோருடன் ஒற்றுமையாகவும் பொறுமையுடனும் வாழவே விரும்புகிறார்கள்.
எனவே சகலரும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து சுபீட்சமான நாட்டை கட்டி யெழுப்புவோமாக என்றார்.