உண்மைகளை கண்டறியும் முயற்சிக்கு எவரும் முட்டுக்கட்டை போடக்கூடாது - என்கிறார் ரணில்
வெளிவிவகார அமைச்சராக இருந்த அமரர் லக் ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டமைக்கும் தொடர்புகள் இருக்கின்றன.
இதனை எவராலும் மறுத்துக் கூற முடியுமா? இவ்விவகாரம் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் வெளியாகிவிடும் என்று சிலர் அச்சமடைகின்றனரா? என்று பிரதமர் ரணில்விக்கிரம சிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப் பகுதியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் புலிகளாலேயே படுகொலை செய்யப்பட்டமை தெரிந்த விடயமாகும். கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்கு முன்னரே புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அத்துடன் வடக்கு மக்கள் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விடாது தடுத்து வெற்றியும் பெற்றனர். எனவே கதிர்காமரின் மரணத்துக்கும் புலிகளுக்குப் பணம் கொடுத்ததற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இதனை இல்லை என்று கூறி விட முடியாது. கதிர்காமரைக் கொன்றது புலிகள் தான் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
அத்துடன் அதே காலப்பகுதியில் பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றில் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.இந்த விடயங்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளின் போது வெளிவந்து விடும் என்றே சிலர் அஞ்சுகின்றனர். இல்லையெனில் இதனைத் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாவிலாறு பிரதேசத்திலேயே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக முன்னைய அரசாங்கம் கூறியது. எனினும் அத்துரலியே ரத்ன தேரரினால் அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னரே யுத்தம் ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இது எதேச்சையாக ஆரம்பிக்கப்பட்ட யுத்தமே தவிர திட்டமிடப்பட்டவாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.
2009 காலப்பகுதியில் இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. அன்றைய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் அது பாதகமாக அமைந்துவிடும் என்பதால் 2009 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதிக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னரே இறுதிக் கட்ட யுத்தம் என்ற பெயரில் உக்கிர யுத்தம் ஒன்று இடம்பெற்றது.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் இங்கு பேசப்படுகிறது. வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் கூறப்படுகின்ற கதைகளை நம்புவதற்கு தயாரில்லை.
புலித்தேவனை காப்பாற்றுவதற்கு முயற்சி
அன்று அந்த சந்தர்ப்பத்தில் புலித் தேவனைக் காப்பாற்றுவதற்கே முயற்சிக்கப்பட்டிருந்தது. அங்கு அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதற்குப் பதிலாக புலித் தேவனை பாதுகாக்கவே முயற்சிக்கப்பட்டது. அப்பாவித் தமிழ் மக்களின் சாவுக்கு புலித் தேவனும் பொறுப்புக் கூற வேண்டிய நபராக இருக்கிறார்.
மேலும் இறுதிக்கட்ட யுத்த நேரத்தில் சுட்டுக் கொல்வதற்கு களத்தில் இருந்தவர்கள் தீர்மானித்திருக்கவில்லை மாறாக கொழும்பிலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றைய அரசாங்கத்திடம் இருந்து புலிகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்ட தரகராக புலித்தேவனே இருந்தார். அதனால் தான் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான அநேகமான விடயங்களை நாம் அறிந்தே வைத்துள்ளோம். இல்லை என்று மறுத்துக் கூறமுடியாது.
முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்
இங்குள்ளவர்கள் இராணுவத்தினரைப் பற்றி முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யுத்தத்தை வெற்றி கொண்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்து எப்படி இழுத்துச் சென்றனர் என்பது எமக்குத் தெரியும்.
சினமன் லேக் சைட் ஹோட்டலில் சரத் பொன்சேகா இருந்த போது அவருக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருந்தார். அதற்கமைய சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பளித்த இராணுவ பொலிஸாரை முழங்காலில் இருத்தினர். இங்கு எல்லாத்தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆதலால் தான் அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாம் முயற்சித்து வருகிறோம்.
அப்படியானால் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதனையே இப்போது நாம் செய்திருக்கிறோம். சர்வதேசத்தின் மட்டத்தில் எமது நாட்டின் நற்பெயரை உயர்த்திக் காட்டுவதற்கு நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் கண்டறியப்பட வேண்டும். அவை சீர்திருத்தப்பட வேண்டும். அதற்கான உள்நாட்டுப் பொறி முறையை நாம் தற்போது உருவாக்கியிருக்கிறோம்.
எனினும் புலம் பெயர்ந்து வாழும் சர்வதேசக் குழுக்களும் இந்தியாவின் சில அடிப்படைவாதிகளும் அதே போன்று கொழும்பிலுள்ள அடிப்படை வாதிகளும் தமது குறுகிய கால சலுகைகளை அடைந்து கொள்வதற்காக இனவாத ரீதியிலும் அடிப்படைவாத ரீதியிலும் செயற்பட்டு வருகின்றன.
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாம் எமது பயணத்தை தொடங்கியுள்ளோம். எவருடைய தேவைக்காகவோ அல்லது எத்தகைய தடைகளுக்காகவோ நாம் எமது பயணத்தை இடைநிறுத்தி விட முடியாது. நாம் உள்நாட்டுப் பொறிமுறையையே ஏற்படுத்தியிருக்கிறோம். உண்மைகளைக் கண்டறிய முயற்சிக்கும் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்காது ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இங்கு கூறிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மஹிந்த ராஜபக் ஷ அதனை தெளிவுபடுத்தலாம்.
ஜனநாயக சமூகத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் இச் செயற்பாட்டை ஒன்றிணைத்து முன்னெடுப்போம் என்றார்.