Breaking News

‘ரோ’வின் குகையாக யாழ்ப்பாணம் – அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்திருப்பதாகவும், வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.

ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாக  நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டு நாள் விவாதத்தில், பங்கேற்று நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். யாழ்ப்பாணம், ‘ரோ’வின் குகையாகவே மாறிவிட்டது. வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் ‘ரோ’ ஈடுபட்டுள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் என்பது தேசிய விவகாரங்கள் மற்றும் கொள்கைகளில் எப்போதுமே, சீரழிவான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா தமக்கு உதவும் என்று யாழ்ப்பாண மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியா உண்மையான நோக்கங்களுடன் செயற்படவில்லை, தனது நலன்களை அடிப்படையாக கொண்டதே அதன் நிகழ்ச்சி நிரல் என்பதை அவர்கள் தாமதமாகத் தான் கண்டுபிடித்தார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.