இலங்கை போர்க்குற்றத்திற்கு சர்வதேச நீதி விசாரணைதான் ஒரே தீர்வு- ராமதாஸ்
இலங்கை போர்க்குற்றம் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. அதனால், சர்வதேச நீதி விசாரணைதான் ஒரே தீர்வு என்று பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று அது குறித்து விசாரிப்பதற்காக அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை ஆணையக விசாரணைக் குழு ஏற்கனவே உறுதி செய்திருந்தாலும், இலங்கை அரசின் குழுவே அதை ஒப்புக் கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த அறிக்கையை காரணம் காட்டி ''இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை அரசின் விசாரணைக்குழு உறுதி செய்திருப்பதிலிருந்து அதன் நடுநிலையை உணரலாம். அதேபோல் போர்க்குற்றங்கள் குறித்த நீதி விசாரணையையும் இலங்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடத்தும்" என்று உலக அரங்கில் இலங்கை வாதிடலாம். இந்த ஐயத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று ஜனாதிபதி சிறிசேன மீண்டும் கூறியிருக்கிறார்.
போர்க்குற்றங்களை உறுதி செய்யும் வகையில் இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளிவந்தாலும், இலங்கையின் நிலைப்பாட்டில் அது சாதகமான மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. இன்னும் கேட்டால், போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய இலங்கை நீதிமன்றம் விசாரணை நடத்தும் என ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் ஒப்புக் கொண்ட இலங்கை அரசு, அதிலிருந்து பின்வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கோ அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே, இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டுமானால், அதற்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும். எனவே, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.