இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற அழிவுகளுக்கும் மனிதப்படுகொலைகளுக்கும் இருதரப்புமே காரணம்
யுத்த காலகட்டத்தில் இடம்பெற்ற அழிவுகளுக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இராணுவத்தினர் மட்டுமல்லாது புலிகளும் காரணமாக இருந்தனர். இரு தரப்பினராலும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன என்று மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சுவாமிநாதன் இங்கு மேலும் கூறுகையில், இதே காலப்பகுதியில் 5 ஆயிரம் சிவிலியன்கள் காணமால் போயிருப்பது தொடர்பிலும் முறைப்பாடுகள் பதியப்பட்டிருக்கின்றன.இது எல்லாவற்றுக்குமே பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருந்த முன்னைய ஆட்சியாளர் தமது பொறுப்பிலிலுருந்தும் கடமையிலிருந்தும் தவறியிருக்கின்றனர்.
இதுவரை காலமும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் கடந்த 30 வருடகால யுகம் மீண்டும் உருவாகிவிடக்கூடாது. எமது அரசாங்கம் இவ் விடயங்களில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டநீதிகள் மீறப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதை அறிக்கைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந் நிலையில் பொறுப்புக்கூற வேண்டிய விடயங்களிலிருந்து முன்னைய அரசாங்கம் தவறியிருக்கின்றது. அது மாத்திரமின்றி பொறுப்புக் கூறல் விடயங்களை தட்டிக்கழித்தும் வந்துள்ளது. ஆனால் எமது இன்றைய அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. எழுந்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. எனினும் முன்னைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.
பாதுகாப்பு எனும்போது அது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். மனித உரிமை மீறல் விடயங்கள் இனியும் இடம்பெறக்கூடாது.
யுத்த காலகட்டத்தில் இடம்பெற்ற அழிவுக ளுக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இராணுவத்தினர் மட்டுமல்லாது புலிகளும் காரணமாக இருந்தனர். இரு தரப்பினராலும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன என்றார்.